30 ஆண்டுகளில் அதிரடி முன்னேற்றம்: உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், சீரான கடல், வான்வழிப் போக்குவரத்து, வணிகம்-வர்த்தகம் செய்ய ஏதுவான அரசுக் கொள்கைகள் ஆகியவற்றால், தென் கிழக்கு ஆசியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது சிங்கப்பூர். 1960களில் முன்னேறும் நாடுகளின் பட்டியலில் இருந்து 1990களில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்தது. குறுகிய காலத்தில் மற்ற ஆசிய நாடுகளைவிட அதிக வளர்ச்சி கண்டது சிங்கப்பூர்.
கொள்கை தந்த வளர்ச்சி: சிங்கப்பூரின் அதிரடி வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், வியாபாரம் செய்வதற்கு ஏற்ற கொள்கைகள்-திட்டங்களைச் சிங்கப்பூர் அரசு வகுத்ததுதான் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வணிகம் செய்வதற்கு எளிமையான சட்டங்கள், விதிமுறைகள், நிதிஉதவி போன்றவை இதன் முக்கிய அம்சங்கள். இதனால் இன்று உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கான முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் முன்னிலையில் இருந்துவருகிறது.
முன்னணித் துறைமுகம்: சிங்கப்பூர் துறைமுகத்தின் வழியே செயல்படும் கடல்சார் வர்த்தகம் செழிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 600 துறைமுகங்களோடு வியாபாரம் தொடர்பான இணைப்பில் சிங்கப்பூர் உள்ளது.
இதனால் உலகின் மிகப் பரபரப்பாக இயங்கும் துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்று! அப்படி 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடல்சார் வர்த்தகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது, சிங்கப்பூரை மையமாகக் கொண்ட பிரபல நிறுவனமான ‘டிரான்ஸ்வேர்ல்ட்’. கப்பல் மேலாண்மை, கப்பல் கட்டுமானம், ‘லாஜிஸ்டிக்ஸ்’ போன்று கடல்சார் வர்த்தகம் தொடர்பான பல சேவைகளில் ‘டிரான்ஸ்வேர்ல்ட்’ நிறுவனம் கவனம் செலுத்திவருகிறது.
மறு ஏற்றுமதி: சிங்கப்பூரை வந்தடையும் பொருள்களை எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே மறு ஏற்றுமதி
(Re-export) செய்வது, மின்னணுக் கருவிகள், வேதியியல் பொருள்கள் ஏற்றுமதி ஆகியவற்றை அந்நாட்டின் பொருளாதாரம் அதிகம் சார்ந்திருக்கிறது. இவை மட்டுமன்றி மேம்பட்ட டிஜிட்டல் வசதிகள், ‘ஸ்மார்ட் நேஷன்’ இலக்கை நோக்கிய திட்டங்கள் ஆகியவற்றாலும் சிங்கப்பூரின் வர்த்தகம் தனித்துத் தெரிகிறது.
ஆசியான் பொருளாதாரத் தலைமை: இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்பைப் பொறுத்தவரை இங்கு அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment) மேற்கொள்ளும் முக்கிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல பெருநிறுவனங்கள் சிங்கப்பூரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகின்றன.
தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN) பொருளாதாரத் தலைமை இடமாகச் செயல்படும் சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த ஒரு பாலமாகச் செயல்பட்டுவருகிறது.
இந்தியா - சிங்கை ஒத்துழைப்பு: இந்தியா - சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு மேம்பட சில முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA), இரட்டை வரி விதிப்பு தடுப்புஒப்பந்தம் (DTAA) போன்றவை தொடங்கி, இந்த ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 2024இல் இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.