சென்னை: தமிழகத்தின் கல்வி சிந்தனையும், மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கலைஞர் செய்திகள் மற்றும் உங்கள் சத்யா நிறுவனம் இணைந்து நடத்திய 'அறிவே துணை’ விநாடி- வினா போட்டியின் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது.
பொதுவாக விநாடி - வினா நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு மத்தியில் அறிவு மேம்பாட்டுக்கு ஒரு வாயிலாக இருந்தது. ஆனால் காலப் போக்கில் அவை நம்மிடமிருந்து விலகிவிட்டன. இந்நிலையை இந்த இடைவெளியை போக்க கலைஞர் செய்திகள் எடுத்த ஒரு மாபெரும் முயற்சியே அறிவே துணை விநாடி - வினா போட்டி. இதன் முதல் சீசனை தொடர்ந்து, இரண்டாம் சீசனில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
இதில் 400 பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் திறமைகளின் அடிப்படையில் 36 அணிகள் தேர்தெடுக்கப்பட்டு, நம் கலைஞர் செய்திகள் படப்பிடிப்பு அரங்கத்தில் நடை பெற்ற போட்டியில் பங்கேற்றனர். அறிவே துணை நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மாணவ சமூகத்துக்கிடையே அறிவுப்பூர்வமான சிந்தனையை உருவாக்குவதுதான்.
ஊடகங்களில் இளைஞர்களுக்கான அறிவு ஒளி வீச வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உணர்த்தும் இப்போட்டி, மாணவர்களின் ஆழமான சிந்தனைகளையும் துடிப்பான பதில்களையும் வெளிக்கொண்டு வந்தது. இந்த பயணத்தில் உறுதுணையாக இருந்து விளம்பர தாரர்களுக்கு எங்கள் நன்றி. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலைஞர் செய்திகள் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் அறிவே துணை சீசன் 3 நடக்கும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் அசோசி யேட் பார்ட்னராக ஆச்சி மசாலா, தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி விக்னேஷ் குழுமம் மற்றும் ஜூக் (ZOOK) ஆகிய நிறுவனங்கள் இருந்தன. கோ ஸ்பான்ஸராக கற்பக விநாயகா கல்விக் குழுமம், சன்லேண்ட் ரீபைண்ட் சன் பிளவர் ஆயில் நிறுவனமும் உணவு ஸ்பான்சராக வசந்த பவனும் அறிவு ஸ்பான்சராக பாரதி அகாடமியும் இருந்தன. மேலும் பிரிண்ட் பார்ட்னராக இந்து தமிழ் திசை நாளிதழ் விளங்கியது. இதுதவிர கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியும் சத்யா நிறுவனமும் டைட்டில் ஸ்பான்சர் வழங்கின.