சென்னை: இன்றைய இளைய தலைமுறை மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தையும், புத்தக வாசிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் எஸ்எஸ்எல்எஃப் எஜுகேஷனல் டிரஸ்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - வாசிப்பை நேசிப்போம் எனும் நிகழ்வு இன்று (மார்ச் 21, வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சிக்கும் புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைய தலைமுறை மாணவர்கள் புத்தக வாசிப்பில் பெரிதும் ஆர்வமின்றி இருக்கின்றனர். புத்தக வாசிப்பின் வழியாகத்தான் புதிய உலகைக் காண முடியும், புதிய சிந்தனைகள் பிறக்க முடியும்.
புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ், எஸ்எஸ்எல்எஃப் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜி.சக்திவேல், கல்வியாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர் ஆகியோர் பங்கேற்று, கருத்துரையாற்ற உள்ளனர். புத்தக வாசிப்பின் அவசியத்தை அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்று பயன்பெறலாம்.