நாமக்கல்: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் கல்லூரி வளாகத்தில் ஜனநாயகத் திருவிழா எனும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 17 லட்சம் மக்கள் உள்ளனர். அதில் 14 லட்சம் வாக் காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 1,628 வாக்குச் சாடிகள் உள்ளன.வீட்டுக்கு அருகில் வாக்குச் சாவடி இருந்தால் வாக்களிக்க எளிதாக இருக்கும். அதற்காக மாவட்டம் முழுவதும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இதுதவிர, மாவட்டம் முழுவதும் 257 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஆனால் இதில் வருத்தமான விஷயம் என்றால் பணத்திற்காக வாக்களிக்கின்றனர்.
இம்முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பணத்திற்கு வாக்களிப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். முதல் நிலை வாக்காளர்கள் வாக்களிப்பது குறைவாக உள்ளனர். இம்முறை தேர்தல் ஆணையத்தின் நோக்கம் 75 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாக வேண்டும். ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.
18 வயதிற்கு மேற்பட்டவர்களின் விவரங்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கட்டாயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் நாளான்று கையில் மை வைக்கப்படும். அந்த கறை மிக மிக புனிதமானது. எதற்காக நாம் தேர்தலுக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம் ன்றால் நாம் நமக்கான தலைவரை தேர்வு செய்ய வேண்டும், என்றார்.
முன்னதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். இதுகுறித்து ஒரு ஜெர்மன் கவிஞர் கவிதை எழுதியுள்ளார். அதன் சாராம்சம் என்னவென்றால். ஒரு ஆணி அவசரத்துக்கு கிடைக்காமல் போனதால் ஒரு குதிரை போரில் கலந்து கொள்ள முடியவில்லை.
அந்த ஒரு ஆணி இல்லாததால் குதிரைக்கு லாடம் அடிக்க முடியவில்லை. ஏனெனில் அந்த லாடம் லூசாக இருந்தது. குதிரை போருக்கு போகும் வழியில் லாடம் கழன்று குதிரை கீழே விழுந்து விடுகிறது. ஒரு ஆணி இல்லாததால் ஒரு குதிரையை இழந்தார்கள். ஒரு குதிரையை இழந்ததால் அதன் மீதிருந்த ஒரு வீரனை இழந்தார்கள். அந்த வீரன் தான் போருக்கே முக்கிய தகவல் கொண்டு செல்கிறார்.
அதாவது, போர் வியூகம் குறித்தது. அரசரிடம் இருந்து அந்த தகவல் போகிறது. அந்த தகவல் சரியாகச் செல்லாததால் எதிரிகள், போர்ப்படையை மொத்தமும் அழித்துவிட்டனர். அப்படி என்றால் ஒரு வாக்கு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள், என்றார்.
முன்னதாக கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன் வழிகாட்டுதல்படி தலைமை நிர்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் முதன்மை உரையாற்றினார். `இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் வாழ்த்திப் பேசினார்.
மேலும், கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்தல் குறித்த கேள்விகளுக்கு ஆட்சியர் உமா விளக்கம் அளித்தார். மேலும், `அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்’ என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு குறித்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நூலகங்கள் மற்றும் கேஏசிஇ) ஏ.எம்.வெங்கடாசலம் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.