அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை ’ என்ற நிகழ்வு குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவிகள் 
நிகழ்வுகள்

ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை’ நிகழ்வு; சாதிக்க வேண்டும் என்று திடமாக உழைத்தால் வெற்றி சாத்தியம்: காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை: அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் 'இந்து தமிழ் திசை' வெற்றிப்பாதை என்ற நிகழ்வு குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர்அ.அமல்ராஜ் பேசியதாவது: மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நினைப்பதை அடைய வேண்டுமென்றால் முதலில் நாம் அதனை நினைக்க வேண்டும்.

எண்ணம் இல்லை என்றால் அந்த எண்ணத்தை அடைய முடியாது. நீங்கள் நினைப்பதைத்தான் படிக்க முடியும், படித்தால்தான் சாதிக்க முடியும். எண்ணியதை மட்டுமே நீங்கள் அடைய முடியும். எண்ணாததை எந்தெவொரு காலத்திலும் அடைய முடியாது.

வெற்றியாளருக்கும் வெற்றி பெறாதவருக்கும் உள்ள வேறுபாடு எண்ணம்தான். நீங்கள் சாதிக்க வேண்டும் என்று திடமாக நம்பினால் ஆசைப்பட்டால் அதற்காக உழைத்தால் இந்த உலகம் இணைந்து அவற்றை உங்களுக்கு தந்துவிடும்.

அனைவருக்கும் 24 மணி நேரம்தான் இருக்கிறது. அந்த நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதை பொறுத்து அனைத்தும் அமையும். புத்தகங்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும்.

சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்,
ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் பேராசிரியர் டி.ஸ்டாலின்,
கல்லூரி பொறுப்பு முதல்வர் ராதா, துணை முதல்வ ர் (எஸ்எஃப்எஸ்) ரேணு அகர்வால்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்

தீர்மானித்தல் அவசியம்: இந்தக் கல்லூரி காலத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், என்னவாகப் போகிறோம்? என்பதை தீர்மானிக்காவிட்டால் வாழ்க்கையில் என்றுமே நினைக்க முடியாமல் போய்விடும். சிவில் சர்வீஸ் தேர்வு என்பது அனைத்து தரப்பினருக்கும் பொதுவானது. அனைவராலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முடியும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நீங்கள் படிக்கும்போது உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் நீங்கள் பலதரப்பட்ட மக்களுக்கு உதவிட முடியும். அந்த வாய்ப்பை இந்த தேர்வு நமக்கு வழங்கியிருக்கிறது.

நினைத்தது நடக்கும்: மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் நாம் நினைத்தது நடக்கும். நம்முடைய பழக்கவழக்கங்கள் சரி இல்லையெனில் நமது எண்ணங்கள் சரியில்லாமல் போய்விடும். நம் மனத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் பேராசிரியர் டி.ஸ்டாலின் பேசியதாவது:

நீங்கள் உங்களை முதலில் நம்ப வேண்டும். நீங்களே உங்களை நம்பவில்லை எனில் வேறு யார் உங்களை நம்புவார்கள். பலர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகின்றார்கள், ஏன் என்னால் எழுதமுடியாது? நானும் ஆளப் பிறந்தவள், சாதிக்க பிறந்தவள் என்ற எண்ணம், உணர்வு நமக்குள் வளர வேண்டும்.

தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்: தோல்வி அடைந்ததற்கு குடும்பப்பின்னணிதான் என்று காரணம் சொல்லக்கூடாது.பலர் மோசமான பின்னணியில் இருந்து உலகின் முன்னணி நிலைக்கு வந்துள்ளனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.நமது நாட்டின் ஜனாதிபதியான அப்துல் கலாம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். பிற்காலத்தில் பெரிய அறிவியல் விஞ்ஞானியாகவும் நாட்டின் முதல் குடிமகனாகவும் வந்தார்.

முயற்சிதான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். பிரச்சினை களைக் கண்டு பயப்படக்கூடாது. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். எந்த காரியத்தை நீங்கள் செய்தாலும் உண்மையாக உத்தமமாக செய்ய வேண்டும். நம்மால் இந்த சிவில் சர்வீஸ் தேர்வை எழுத முடியுமா என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கக் கூடாது. நீங்கள் ஆளப்பிறந்தவர்கள் நீங்கள் நினைத்தால் சாதிக்கலாம் இந்த உலகத்தில் சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறைய வழிகள் திறந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்து தமிழ் திசை' நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, ‘‘எத்தனைதடைகள் வந்தாலும் மாணவர்கள்நம்பிக்கையோடும் விடாமுயற்சி யோடும் படித்தால் வெற்றி எனும் இலக்கை நம்மால் அடைய முடியும்’’ என்றார்.

இந்நிகழ்வில், கல்லூரி பொறுப்பு முதல்வர் ராதா, துணை முதல்வர் (எஸ்எஃப்எஸ்) ரேணு அகர்வால், கரியர் கெயிடண்ஸ் செல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுகந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT