நாமக்கல்: இந்திய திருநாட்டின் 18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய பல லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளார்கள். அவர்களிடம் நம் ஜனநாயகத்தின் பெருமையையும், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் கேஎஸ்ஆர் எஜூகேஷனல் இன்ஸ்டிடியூசன்ஸ் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘ஜனநாயகத் திருவிழா’ எனும் நிகழ்வு இன்று (மார்ச் 7, வியாழக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு திருச்செங் கோடு கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்திலுள்ள பிளாட்டினம் அரங்கில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் தலைமை அதிகாரியுமான மருத்துவர் ச.உமா, இஆப., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வில் கேஎஸ்ஆர் எஜூகேஷனல் இன்ஸ்டிடியூசன்ஸ் சேர்மன் ஆர்.சீனிவாசன், கேஎஸ்ஆர் எஜூகேஷனல் இன்ஸ்டி டியூசன்ஸ் சிஇஓ டாக்டர் அகிலா முத்துராமலிங்கம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் ஆகியோர் பங்கேற்றவுள்ளனர்.
‘என் முதல் வாக்கு; என் முதல் பிரதிநிதி’ எனும் முழக்கத் தோடு நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முதல் தலைமுறை வாக்காளர்களான புதிய வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்வதோடு, இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் எனும் உறுதிமொழியையும் எடுத்துக் கொள்ள இருக்கிறார்கள்.