சென்னை: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப்டெக்னாலஜி (விஐடி) வழங்கும் ‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி’ எனும் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு தமிழகத்தில் 5 இடங்களில் மண்டல வாரியாக நடைபெற்றது.
மண்டல அளவில் ஆய்வுகள் சமர்ப்பித்து, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நாளை (பிப். 8) காலை 9 மணிக்கு வேலூர் விஐடி வளாகத்தில் தங்களது ஆய்வை விளக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொணரும் நோக்கிலும் நடைபெறும் இந்த நிகழ்வில் மாநிலம் முழுவதுமிருந்து தேர்வான 26 குழுக்கள் பங்கேற்க உள்ளன.
வேலூர் விஐடி வளாகத்தில் நாளை காலையில் தொடங்கும் இந்த நிகழ்வின் நிறைவுவிழா பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. நிறைவு விழாவில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) எல்பிஎஸ்சி இயக்குநர் டாக்டர் வி.நாராயணன் ஆகியோர் பங்கேற்று, மாநில அளவில் தேர்வான மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுகின்றனர்.
இந்த அறிவியல் திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லா பொறியாளர்கள் - இந்தியா (பெங்களூரு பிரிவு) ஆகியவை இணைந்துள்ளன.