விஐடி சென்னை மற்றும் இந்து தமிழ் திசை சார்பில் 'நாளைய விஞ்ஞானி 2025' நிகழ்வு சென்னை விஐடி வளாகத்தில் நடந்தது. இதில் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவ மாணவியர், அவர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
மேலக்கோட்டையூர் விஜடி, சென்னை உடன் இணைந்து 'இந்து தமிழ் திசை' - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கும் 'நாளைய விஞ்ஞானி 2025' எனும் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது.
சென்னை மண்டல ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு மேலக்கோட்டையூரில் உள்ள சென்னை விஐடியில் நேற்று முன்தினம் (பிப்.8) நடைபெற்றது. இந்த நிகழ்வில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.
இந்த அறிவியல் திருவிழாவைத் தொடங்கிவைத்து, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் உறுப்பினர்-செயலர் டாக்டர் எஸ்.வின்சென்ட் பேசியதாவது: ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று சொல்லப்படும் அப்துல் கலாம் கிராம பின்னணியிலும் ஏழ்மை நிலையிலும் சராசரி மாணவராக இருந்தார்.
அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது அவரது அறிவியல் சிந்தனைதான். இந்த அறிவியலால் மக்களுக்கு நான் எவ்வாறு பயன்பெறப் போகிறேன் என்ற உத்வேகம் அவரிடம் இருந்தது. நம்முடைய கண்டுபிடிப்புகள், செயல்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
எஸ்.வின்சென்ட், பி.கே.மனோகரன், கே.சத்தியநாராயணன், சிவராஜா ராமநாதன்
தற்போது வளர்ந்துவரும் அறிவுக்கு அடிப்படை கணிதம்தான், அதேபோல், ஏஐ-க்கும் கணிதம்தான் அடிப்படை. எனவே கணிதத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம், உங்களின் படைப்பை ஆராய்ச்சி செய்து, அதில் நாட்டுக்குப் பயன்படக்கூடிய தொழில் நுட்பங்கள் இருந்தால் நாங்களே உங்களுக்கு காப்புரிமை பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி சென்னை கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் பேசும்போது, ‘‘நாளைய விஞ்ஞானியின் நோக்கம் என்னவென்றால் மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டுதல் மற்றும் திறனை வெளிக்கொணர்தல் என்பதுதான். சில விஷயங்கள் மாறாதது; சில விஷயங்கள் மாறக்கூடியது. பசி, தாகம் என்பது என்றும் மாறாதது.
ஆனால் அந்த பசி, தாகத்தைப் போக்கிக் கொள்ள மனிதன் பின்பற்றக்கூடிய வழிமுறை காலத்துக்கு காலம் மாறுகிறது. இந்த மாற்றத்துக்கு காரணம் அறிவியல் தொழில்நுட்பம்தான்” என்றார். இதைத்தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற விஐடி சென்னை இயக்குநர் முனைவர் கே.சத்தியநாராயணன் பேசும்போது, “உங்களிடம் உள்ள அறிவுத் திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி வளர்த்துக் கொண்டால், நீங்கள் விஞ்ஞானியாகவும் தொழிலதிபர்களாக வும் வர வாய்ப்புள்ளது” என்றார். அதைத்தொடர்ந்து, மாநில அளவில் ஆய்வைச் சமர்ப்பித்திட தேர்வானமாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை அமைப்பின்தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் பேசும்போது, ‘‘நாம் செய்யும் ஆய்வு இந்த உலகத்துக்குப் பயன்பட வேண்டும்.
அந்த ஆய்வை பலரும் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த வகையில் சிந்தனையும் செயலும் இருக்க வேண்டும். தமிழக மாணவர்களை உலகத்தரம் மிக்க மாணவர்களாக மாற்றுவதுதான் தமிழக அரசின் கொள்கை. வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்லாமல் தொழில் முனைவோர்களாக மாணவர்கள் வளர வேண்டும். அதற்கான அடித்தளத்தை மாணவ பருவ காலங்களிலிருந்தே சிந்திக்க வேண்டும்’’ என்றார்.
ஆய்வுகளைச் சமர்ப்பித்த மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சென்னையைத் தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நெல்லை மற்றும் திருச்சியில் ஏற்கெனவே முடிந்துள்ளன. இதில் தேர்வாகும் மாணவர்கள் சென்னை விஜடி வளாகத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் திருவிழாவில் பங்கேற்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் எஸ்.சுப்பிரமணி, மாநிலச் செயலாளர்கள் தீனதயாளன், அரவிந்தன், சென்னை மாவட்ட பொருளாளர் அனிதா, ‘இந்து தமிழ் திசை’ சீனியர் பொது மேலாளர் வெங்கடசுப்ரமணியன், விளம்பரப் பிரிவு பொதுமேலாளர் வி.சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வில் சீனியர், ஜூனியர் பிரிவுகளில் தலா 7 பள்ளிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
சீனியர் பிரிவு: காஞ்சிபுரம் மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை டபிள்யூ.பி.ஏ.எஸ். மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர் தாசர்ஸ் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் மாவட்ட பண்ருட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர் இந்து அரசு மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் அரசு பி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி.
இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற சீனியர் பிரிவு மாணவர்கள்.
இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற ஜூனியர் பிரிவு மாணவர்கள்.
ஜூனியர் பிரிவு: கடலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, திருவள்ளூர் வேலப்பன்சாவடி அரசு உயர்நிலைப்பள்ளி (2 அணிகள்), விழுப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சென்னை எஸ்.பி.ஓ.ஏ. ஸ்கூல் மற்றும் ஜூனியர் காலேஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, திருவண்ணாமலை ஹரிஹரன் நகர் அரசினர் உயர்நிலைப்பள்ளி.