சென்னை: ‘கண்காணிப்பு - செழிப்புக்கான நேர்மை’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்- 2026’ அக்.26 முதல் நவ.1 வரை நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட உள்ளது.
இதையொட்டி, காமராஜர் துறைமுக நிறுவனமும், சென்னை துறைமுக ஆணையமும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு ‘கண்காணிப்பு - செழிப்புக்கான நேர்மை’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் ஆன்லைன் விநாடி-வினா போட்டியை நடத்துகின்றன.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்கலாம்.
இந்த விநாடி வினா போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், ‘கண்காணிப்பு-செழிப்புக்கான நேர்மை’ எனும் தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரையை எழுதலாம். கட்டுரையை இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதன் வழியே அனுப்ப வேண்டும்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களும், ஆசிரியர்களும் இத்துடன் உள்ள QR Code-ஐஸ்கேன் செய்து, அக்.26-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதல்கட்ட விநாடி-வினா நிகழ்வு அக்.27-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும்.
இறுதிப் போட்டி அக். 29-ம் தேதி நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை. கூடுதல் விவரங்களுக்கு 97916 05238 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.