நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். காட்டுப்பகுதிகளில் தடைகளைக் கடந்து சென்று, கடிதங்களைக் கொடுத்துவந்தார் தபால்காரர் சிவன். இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...
நீலகிரி குன்னூர் பகுதியில் மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் தனி ஆளாக சென்று பழங்குடிகளிடம் தபால்களைக் கொண்டு சேர்த்த சிவன், 35 வருடங்களாக தபால்துறையில் பணியாற்றியவர். குன்னூரில் உள்ள வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவன் பள்ளிப் படிப்பை முடித்ததும், தபால்துறையில் சேர்ந்தார்.
1985-ஆம் ஆண்டு வெலிங்டன் தபால் நிலையத்தில் விற்பனையாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். 2010-ஆம் ஆண்டு ஹில்குரோவ் தபால்நிலையத்தில் தபால்காரராகப் பணிமாறுதல் பெற்றார். 15 கி.மீ தூரம் காட்டுக்குள் தனியாக நடந்து சென்று கடிதங்களையும், பண அஞ்சல்களையும் கொண்டு சேர்க்கும் பணி குறித்து சிவன் கூறியதாவது: “காலை 9.30 மணிக்கு குன்னூர் தபால்நிலையத்துக்கு சென்று, தபால்களை வாங்கி பேருந்தில் ஹில்குரோவ் செல்வேன். அங்கிருந்து நடைபயணம் தான். எனது கால் தடங்களோடு, யானை, கரடி, புலி, காட்டெருமைகளின் கால் தடமும் இருக்கும்.
ஆரம்பத்தில் வனவிலங்குகளை பார்க்கும்போதுப் பயம் ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் இரண்டு அடி தூரத்தில் யானைகளையும், காட்டெருமைகளையும் கடந்து செல்லப் பழகிவிட்டேன்.
நான் பணியில் சேர்ந்த சமயத்தில் குன்னூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டமும் அதிகரித்திருந்தது. யானைகள் அதிக மோப்ப சக்தி வாய்ந் தவை. நான் மனிதன் என அவைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக யானைகளின் காய்ந்த சாணத்தை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வேன்.
பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி தபால்களைக் கொண்டு சேர்த்திருக்கிறேன். என் தபால் பையில் இருக்கும் கடிதங்கள் பலரின் எதிர்பார்ப்பு, கனவு, லட்சியம், அன்பு ஆகியவற்றை சுமக்கிறது. அதை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. பழங்குடி மக்கள், எனக்காக தரும் தேநீரின் சுவையும், அவர்களின் அன்பும் என்றும் என் நினைவில் இருக்கும்.
பணி ஓய்வு பெற்றாலும், பழங்குடியின மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்” என்றார் சிவன்.
சிவனின் சேவையை பாராட்டி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ, “குன்னூரில் அணுக முடியாத பகுதிகளில் அஞ்சல் வழங்கும் தபால்காரர் சிவன் என்றும் கடினமான காடுகள் வழியாக தினமும் 15 கிலோ மீட்டர் பயணித்தவர். கடந்து 30 ஆண்டுகளாக தனது பணியைச் சிறப்பாகச் செய்த தபால்காரர் சிவன்” எனத் தெரிவித்துள்ளார்.
‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிவனின் பங்கு பாராட்டுக்குரியது’ என ட்விட்டரில் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட தபால்துறை துணை மேற்பார் வையாளர் பானுமதி, “சிவனைப்போன்ற பணியாளர்கள் பகுதி நேர ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்விற்கு முன்பாகவே அனைவரின் பாராட்டையும் சிவன் பெற்றிருப்பது தபால்துறைக்கு பெருமை” என்றார்.