நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏழைகளுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்து வருகிறார் நாகராஜ். இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...
லாலாபேட்டை கடைவீதியில் நடந்து சென்ற நாகராஜை, “வாங்கண்ணே டீயாவது சாப்பிட்டு போங்க”, என வாஞ்சையுடன் கூறி நாகராஜை வீட்டுக்குள் அழைத்து செல்கிறார் அய்யப்பன். “வீட்ல அப்பா, தங்கச்சி நல்லா இருக்காங்களா?”, என அக்கறையுடன் அவரிடம் விசாரித்தபடி வீட்டின் உள்ளே செல்ல பக்கவாத பாதிப்பால் அங்கே படுத்திருக்கும் அய்யப்பனின் தந்தை மோகன், நாகராஜை பார்த்து எழுந்து அமர்ந்த அவர் பக்கவாதத்தால் சரிவர பேச முடியாததால் நல்லாயிருக்கேன் என்பதுபோல தலையை அசைக்கிறார்.
மேலும், சாப்பிடுங்க என நாகராஜிடம் ஜாடையில் சொல்கிறார். தற்போதுதான் சாப்பிட்டதாக நாகராஜ் மறுக்கவே, அய்யப்பனின் தாய் சித்ரா, “நீங்க அவ்வப்போது செய்யும் உதவியாலதான் நாங்களே வயித்த காயப்போடாம சாப்பிடுறோம்”, என்றார்.
பெட்ரோல் பங்க் ஊழியரான மோகனுக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் ஏற்பட்ட பக்கவாத பாதிப்பு அவரை வீட்டுடன் முடக்கிப்போட்டுவிட்டது. அவரது சிகிச்சைக்கு நாகராஜ் பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறார். அப்போது தேநீருடன் உள்ளிருந்து வந்த மோகனின் மகள் ஸ்ரீதாரணியிடம், “நல்லா இருக்கியா?” என நாகராஜ் ஜாடையில் விசாரிக்கிறார். நலமாக இருப்பதாக அவர் தலையை ஆட்டுகிறார். ஸ்ரீதாரணியால் சரிவர காது கேளாததால் முழுமையாக பேச முடியாது.
அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீதாரணியின் படிப்புக்கு தேவையான உதவிகளை நாகராஜ் செய்து வருகிறார். மேலும், அவருக்கு அரசின் உதவித்தொகையை பெற்றுத்தரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
பிறக்கும்போதே வலது கால், வலது கை இரண்டும் போதிய வலுவின்றி இருந்ததால் 5 வயது வரை நாகராஜால் நடக்க முடியவில்லை. 5 வயசுக்கு பிறகு ஒரளவு நடக்க முடிந்தது. நாம நடக்க முடியாமலே போயிருந்தா வீட்டுக்குள்ளே முடங்கியிருந்திருப்போம். எனவே நம்மப்போல மாற்றுத்திறனாளி மற்றும் ஏழைகளுக்கு நம்மாள முடிஞ்ச உதவி பண்ணனும்னு முடிவு செய்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்தும், தனக்கு சொந்தமான புத்தகக்கடையில் வரும் வருமானத்தையும் கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோர் இல்லாத மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, உதவித்தொகை பெற்று தருவது, என என்னால் முடிந்தளவு மக்களுக்கு உதவி வருகிறேன் என்றார்.
அப்போது எதிரே வந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவியான சுஷ்மிதா, “ஏழெட்டு மாதங்களுக்கு முன் கை வீங்க தொடங்கி பள்ளியில் பாடங்களை எழுத முடியாமல் அவதிப்பட்டேன். இதுகுறித்து அறிந்த நாகராஜண்ணே, கரூரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற உதவினார். மேலும், இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கி, கல்விக்கும் உதவி வருகிறார். எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் உதவும் நல்ல மனசுக்காரர் தான் எங்கள் நாகராஜண்ணே”, என கண்களில் நன்றி பெருக்கோடு தெரிவித்தார்.