‘தி இந்து’ குழுமத்தின் 12-ம் ஆண்டு இலக்கிய திருவிழாவை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, குத்துவிளக்கேற்றி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். உடன் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் நிர்மலா லஷ்மண், தலைமை செயல் அலுவலர் (வெளியீட்டுப் பிரிவு) எல்.வி.நவ்நீத், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரியர் சுரேஷ் நம்பத், ஜி ஸ்கொயர் தலைமை அலுவலர் (விற்பனைப் பிரிவு) லதா அரங்கநாதன் ஆகியோர். 
வர்த்தக உலகம்

‘தி இந்து’ குழுமத்தின் இலக்கியத் திருவிழா தொடக்கம்; மனிதரின் நம்பிக்கையைத் தூண்ட புத்தகங்கள் பெரிதும் உதவுகின்றன: மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: மனிதரின் நம்பிக்கையைத் தூண்டுவதற்கு புத்தகங்கள் பெரிதும் உதவுகின்றன என்று `தி இந்து' குழுமத்தின் இலக்கியத் திருவிழாவில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி கூறினார்.

‘தி இந்து’ குழுமம் சார்பில் 12-ம் ஆண்டு இலக்கிய திருவிழா, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ளசர் முத்தா வெங்கட சுப்பாராவ் கலையரங்கத்தில் நேற்று தொடங்கியது. மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசியதாவது: மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட எந்த படைப்பிலும் முழுமையான துல்லியத்தன்மையைக் காண முடியாது. ஏதேனும் சில குறைபாடுகள் இருக்கும்.

அதேபோல,புத்தகங்களிலும் துல்லியத்தன்மையை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், அதில் நேர்மை எனும் மிகச்சிறந்த அம்சம் இடம்பெற்றிருக்கும். நேர்மை என்பது ஏறத்தாழ துல்லியத்தன்மைக்கு நிகரானதாகும். ஏனெனில், ஒருமனிதன் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். குறிப்பாக, வெளிப்படையாகவும், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டும் வாழ்வது சிரமம்.

தமிழில் நம்பிக்கை எனும் சொல் உள்ளது. அத்தகைய நம்பிக்கையின் தூண்டுகோலாக நூல்களே அமையும். ஒரு புத்தகத்தின் முகப்பு, அச்சுக் கட்டமைப்பு, அதன் வார்த்தைகள் ஈர்க்காவிட்டாலும், நம்பிக்கை எனும் விதையை நம்மிடம் விதைக்க நூல்கள் தவறுவதில்லை.

தனி மனிதரின் வாழ்க்கையில் சிறந்த இணையாகவும், உற்ற நண்பனாகவும் புத்தகங்கள் விளங்குகின்றன. குறிப்பாக, சிலரின் குணங்கள் மற்றும் இயல்புகளை மாற்றியமைக்கக்கூடிய சக்தியாகவே நூல்கள் திகழ்கின்றன. கீழ்படிந்து நடக்கவும், பின்பற்றவும் உதவும் புத்தகங்கள், மனிதர்களைப் பக்குவப்படுத்துகின்றன. அத்தகைய அறிவுஞானத்தை வழங்கும் புத்தகங்களுக்கு, நாம் உரிய இடத்தை வழங்க வேண்டும் என்றார்.

‘தி இந்து’ குழுமத்தின் தலைவர்நிர்மலா லஷ்மண் பேசும்போது, ‘‘இந்த விழா கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள், தங்களின் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளும் களமாகும். `தி இந்து'வின் மரபான நேர்மை,அச்சமற்ற பண்பு உள்ளிட்ட அம்சங்களுடன் தொடர்ந்து பயணிப்போம்.இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள், புதிய சிந்தனைகள், நேர்மறையான மாற்றங்களை தூண்டும் வகையில் அமைகின்றன. வாசகர்கள், எழுத்தாளர்கள் இடையே நேரடிப் பிணைப்பை உருவாக்க இந்த விழா உதவியாக இருக்கும்’’என்றார்.

விழாவில் `தி இந்து' நாளிதழ் ஆசிரியர் சுரேஷ் நம்பத், `தி இந்து' குழும தலைமை செயல் அலுவலர் (வெளியீட்டுப் பிரிவு) எல்.வி.நவ்நீத், ஜி ஸ்கொயர் தலைமை அலுவலர் (விற்பனைப் பிரிவு) லதா அரங்கநாதன் சிறப்புரையாற்றினார். மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

முதல் நாளில் விவாத அரங்கு, கருத்தரங்குகள், இலக்கிய உரைகள் நடத்தப்பட்டன.இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று (ஜன. 27) நடைபெறவுள்ள பல்வேறு அமர்வுகளில்துறை நிபுணர்கள் பேசுகின்றனர்.

SCROLL FOR NEXT