சென்னை: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் `ஐடியா ஃபார் சேஞ்ச்' என்ற போட்டியின் மூலம், 10வகையான தொழில் சவால்களுக்கு புதுமையான தீர்வைவழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என்பது உலக வங்கி உதவியுடன், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயல்படுத்தும் திட்டமாகும். கிராமப்புற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்டு 6 ஆயிரம் நிறுவனக் குழுக்கள், 6,620 தனிநபர் நிறுவனங்களை உருவாக்கி, அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 10 புதுமையான முன் னோடித் திட்டங்களை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்துகிறது.
குறிப்பாக, செங்கல்பட்டு, தூத்துக்குடி, ஈரோடு, நாகபட்டினம், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, சிவகங்கைமாவட்டங்களில் உள்ள மகளிர்சுயஉதவிக் குழுவினர் பல்வேறுதொழில் மற்றும் வர்த்தகங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
தொழில்களில் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் `ஐடியா ஃபார் சேfஞ்ச்' என்ற போட்டியை நடத்துகிறது. இதில் பங்கேற்று தீர்வுகளை வழங்குவோர், வாழ்ந்து காட்டுவோம் திட்ட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, புதுமையான தொழில் தீர்வுகளைச் செயல்படுத்தத் தேவையான உதவிகளைப் பெறலாம். மேலும், வழிகாட்டி, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், இன்குபேஷன் மையங் கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். கூடுதல் விவரங்களுக்கு vkp-tnrtp.org இணையம், ideaforchange.tnrtp@gmail.com இணைய முகவரி மற்றும் 022-6195-2700எண் மூலம் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.