விவரம் தெரிந்த நாளில் இருந்து என் குடும்பத்தினர் அனைத்து மொழிப் படங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்வர். மொழி சரிவரப் புரியாவிடினும் தங்களின் நடிப்பாற்றலால் நமக்குப் புரிய வைத்துவிடும் நடிகர் பலர். அவர்களில் தனது மிகவும் யதார்த்தமும் இயல்பும் கலந்த மிகையற்ற நடிப்பை வழங்கியவர்களில் ஒருவர் ‘பத்ம பூஷன்’ தர்மேந்திரா.
ஆங்கில நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் அவரது பேட்டிகளைப் படித்தும், முதுமையில் அவர் அளித்த பேட்டியின் வழியாக அவர் திரையுலகில் கடந்து வந்த கடினமான பாதையையும் அறிய நேர்ந்தது. அவருக்கு, இந்தித் திரையுலகில் பல தடைகளையும் இன்னல்களையும் தந்ததாக ஓர் உச்ச நடிகர் பெயர் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். அவர் ராஜேஷ் கண்ணா. அவருடைய பெண் தோழியும் பத்திரிகையாளருமான தேவயானி சௌபாலும் தர்மேந்திராவுக்கு அதிகக் குடைச்சல்கள் கொடுத்ததாகப் படித்திருக்கிறேன். இவர்களின் கடும் விமர்சனங்களையும் இழிவுபடுத்தலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு கடந்து வந்தவர் தர்மேந்திரா.
கதாபாத்திரத்துக்குத் தேவையற்ற உடல் மொழிகளையோ அங்கச் சேட்டைகளையோ மிகை நடிப்பையோ வெளிப்படுத்தாதவர். அதேசமயம் கைவரப்பெற்ற இயல்பான நடிப்பின் மூலம் தன் கதாபாத்திரங்கள் அனைத்தின் வழியாகவும் இனிய ஹீரோவாக அனைவரையும் கவர்ந்தவர்.
அதேபோல், மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி போல் வசீகரமான உடலமைப்பைக் கட்டுக்கோப்பாகப் பேணியவர். அவருடைய ‘ஷோலே’, ‘ தரம் வீர்’ ஆகிய படங்களை என்னுடைய இளமைக் காலத்தில் நான் பிளாக் டிக்கெட் வாங்கிக்கொண்டுபோய் பார்த்த நினைவு மனதில் அலைமோதுகிறது. மொத்தப் படத்திலும் இனிமை கூடிய கதாபாத்திரங்களில் தோன்றுவதில் விருப்பம் கொண்ட அவரைப் பாடல் காட்சிகளில் அவ்வளவு சிலிர்ப்புடன் ரசிக்கலாம். பாடல் காட்சிகளில் அவரின் நடிப்பு அவ்வளவு ரசனைக்குரியதாக இருக்கும்.
நடிப்பின் அளவுகோல் கொண்டு அவரை மதிப்பிட்டால், குரு தத், மனோஜ் குமார், சஞ்சீவ் குமார், போன்ற சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர்களின் வரிசையில் சந்தேகமின்றி இடம்பெறும் தகுதி கொண்டவர். என் போன்ற முழுமையான இந்தி மொழி தெரியாதவர்களையும் எளிதில் வந்தடைந்தவர். பாலிவுட்டின் நட்சத்திரப் பால்வெளியில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் ‘நெப்போட்டிச’த்தில் பரிணமித்தவர் என்றாலும் பண்பாளர்.
ஒரு குமாஸ்தாவாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர் நாயகனாகி இந்தி துறையில் கொடி கட்டி பறந்தார். தமிழில் வெற்றிபெற்ற கதைகளைச் சாண்டோ சின்னப்பா தேவர் இந்தியில் உருவாக்கியபோது அவருடைய ஆஸ்தான நாயகன் தர்மேந்திராதான். கலைப்பயணம் முடித்து வானுலக பயணம் சென்றடைந்தவர் அமைதி கொள்ளட்டும்.
- ஆர் சியாமளா, மாத்தூர், புதுக்கோட்டை | தர்மேந்திராவின் ஆத்மார்த்தமான ரசிகை.