உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்கா, தமிழிலும் பாதிப்பை விளைவித்த எழுத்தாளர். அவரது ‘விசாரணை’ நாவல் ஏ.வி.தனுஷ்கோடி மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்தது; அவரது ‘உருமாற்றம்’ ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.
காசநோய் பாதிக்கப்பட்டிருந்த காஃப்கா, பால்டிக் கடற்கரை கிரால் முரிட்ஸ் நகரத்தில் ஒரு கோடைக் கால முகாமில் தோரா தியாமந்தை முதலில் கண்டார். முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டார். அப்போது காஃப்காவுக்கு வயது 40. தோராவுக்கு 20. அங்கிருந்த மூன்று வாரத்திலேயே அவர்கள் பெர்லினில் வாழத் தீர்மானித்துவிட்டிருந்தார்கள். தனது பெற்றோரை விட்டு காஃப்காவுடன் புறப்பட்டார் தோரா. பெர்லினில் சில காலம் வாழ்ந்தார்கள். ஆனால், காசநோயின் பீடிப்பால் காஃப்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தப் புது உறவுக்கு ஒரு வயதுகூட ஆகவில்லை. அதற்குள் தோராவின் மடியிலேயே காஃப்காவின் உயிர் பிரிந்தது. காஃப்கா-தோராவின் இந்தக் காதல் கதையை ஜெர்மானிய இயக்குநர் கியாக் மாஸ் ‘The Glory of Life’ என்கிற பெயரில் திரைப்படமாக இயக்கிவருகிறார்.
வாசக சாலை கவிதைப் பயிலரங்கு
வாசக சாலை அமைப்பு நவீனக் கவிதை குறித்த கட்டணப் பயிலரங்கை ஒருங்கிணைத்துள்ளது. இந்தப் பயிலரங்கு ஜூன் 10, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெறவுள்ளது. ‘புரவி’ சிற்றிதழுக்குப் பணம் திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது. பயிலரங்க நெறியாளர்: கவிஞர் இளங்கோ கிருஷ்ணன். கட்டணம்: ரூ.2,000. தொடர்புக்கு: 99426 33833
தஞ்சை ப்ரகாஷ் விருது
தஞ்சை ப்ரகாஷ் நினைவு விருது எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ஜூன் 4ஆம் தேதி தஞ்சையில் பெசன்ட் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் எழுத்தாளர்கள் வேல ராமமூர்த்தி, கீரனூர் ஜாகிர்ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். கீரனூர் புக்ஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது.