பிரெஞ்சு-தமிழ், தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் ச.மதனகல்யாணி கடந்த வாரம் காலமானார். பிரெஞ்சிலிருந்து ஆக்கபூர்வமான சில படைப்புகளைத் தமிழுக்கு அவர் அளித்துள்ளார். புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர் காம்யூவின் ‘கொள்ளை நோய்’, பிரெஞ்சின் முன்னோடி எழுத்தாளரான ஒனோரே த பால்சாக்கின் ‘தந்தை கோரியோ’ ஆகிய இரு நூல்கள் அவற்றுள் முக்கியமானவை.
மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராமுடன் இணைந்து அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ நூலை மொழிபெயர்த்துள்ளார். பாரதியார் கவிதைகள், சிலப்பதிகாரச் சுருக்கம், புதுச்சேரி நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற ஆக்கங்களைத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு இவர் மொழிபெயர்த்துள்ளார். புதுச்சேரியில் இயங்கும் பிரான்ஸ் அரசின் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர். இவரது மொழிபெயர்ப்புப் பங்களிப்புக்காக பிரான்ஸ் அரசின் செவாலியே, ஒஃபிஸியே ஆகிய விருதுகளையும் புதுச்சேரி அரசின் கலைமாமணி விருதும் பெற்றவர்.
குரோம்பேட்டையில் புத்தகக் காட்சி
சென்னை குரோம்பேட்டையில் ராதா நகர் பிரதான சாலையிலுள்ள செல்வம் மஹாலில் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி, 17.05.2023வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட புத்தகங்கள் 10 சதவீதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும். தொடர்புக்கு: 98843 55516.
விஷ்ணுபுரம் கவிதை விருது
‘உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்’ என்கிற தொகுப்புக்காக கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘குமரகுருபரன் நினைவு கவிதை விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் இந்த விருது அளிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்டது இவ்விருது.
சங்க இலக்கியச் சொற்பொழிவு
உறவுச் சுரங்கம் சார்பில் ‘தமிழ் 36 – சங்க இலக்கியங்கள்’ கூட்டம் வரும் செவ்வாய்க் கிழமை (16.05.23) அன்று மாலை 6 மணி அளவில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் ம.இராசேந்திரன், உலகநாயகி பழனி, செளந்தர்யலட்சுமி, வே.செவ்வந்தி ஆகியோர் கலந்துகொள்கிறனர். பேராசிரியர் வ.ஜெயதேவன், எழுத்தாளார் தமிழ்மகன், சொற்பொழிவாளர் மதிவண்ணன் ஆகியோர் கெளரவிக்கப்படவுள்ளனர்.