வலைஞர் பக்கம்

தேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை

சென்னிமலை தண்டபாணி

சிம்னி விளக்கொளியில்

இரவும் பகலுமாய்

அம்மா சுற்றிய கைராட்டை

உறங்கவிடாமல்

சுற்றிக் கொண்டேயிருக்கிறது

என் கவிதைகளில்.

அறுந்து புனைந்த நூல்கண்டுகளில்

முடிச்சு முடிச்சாய்

அவிழ்த்தெறிய முடியாத

அவள் ஞாபகங்கள்.

தனக்கு மட்டும் கேட்கும்படி

அவள் பாடிக்கொண்டே

நூற்றுக் கொண்டிருந்த

பொழுதுகள்,

சோடி முடிந்த நாட்கள்

எல்லாத் திசைகளில் இருந்தும்

எதிரொலிக்கிறது எனக்குள்.

எவருக்கும் தெரியாமல்

அவள் அழுத கண்ணீரின்

வெப்பத் துளிகள்

நட்சத்திரங்களாய்

மின்னிக் கொண்டேயிருக்கின்றன.

திசை கடந்து பறந்த

தன் குஞ்சுப் பறவைகளின்

திசைகளைக் கண்களுக்குள்

எழுதி வைத்திருந்து

காத்திருந்த காலங்கள்

ஐப்பசி, தை-களில்

பூத்து மலர்ந்துவிடும்.

தைப்பூசத்துக்கும் தீபாவளிக்கும்

வந்துபோகும் சொந்தங்களுக்கு

சமையல் அறையிலிருந்து

அவளே

மணமாய் மலர்ந்தாள்.

பேரப் பிள்ளைகளுக்கும்

மகளுக்கும் மருமகள்களுக்கும்

முறுக்கும் மைசூர்பாவுமாய்

சுட்டு வைத்த வாசனை

வீட்டுச் சுவரில்

வீசிக் கொண்டேயிருக்கிறது.

எப்படிக் கரைசேர்வானோ

இவன் என்று

என் கால்களை வருடிய

அவளின் கண்ணீரில் நான்

நீந்திநீந்திக் கரைதொட்டபோது

மரணத்தின் மடியில்

பூவாய் உதிர்ந்து போனாள்.

இன்னும் எங்கேனும்

ராட்டை ஒலி கேட்கையில்

என்னையும் அறியாமல்

திரும்பிப் பார்க்கிறேன்..

தலைகுனிந்து பாட்டிசைத்து

பாடிக்கொண்டிருப்பாளோ

எனக்கான ஒரு பாடலை!

SCROLL FOR NEXT