வலைஞர் பக்கம்

பட்டிமன்ற நடுவரின் பன்முக வாழ்வனுபவங்கள்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவரும் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் லியோனியின் வாழ்வனுபவங்களின் பதிவு இந்நூல். அவர் படித்த உயர்நிலைப் பள்ளியில் நிறைய ஏழை மாணவர்கள் பயின்றிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கக்கூடிய ஒரே வெள்ளைச் சீருடையை மூன்று நாள்களுக்கு மேல் அணியும்போது மிகவும் அழுக்காகிவிடும் என்பதால், அதைத் துவைத்து உடுத்திக்கொண்டு வருவதற்காகவே அந்தப் பள்ளியில் சனிக்கிழமைக்குப் பதிலாக வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அன்றைய பள்ளிகள் ஏழை மாணவர்களுக்குக் கல்வி புகட்டிக் கரையேற உதவியதோடு நில்லாமல், அவர்கள்மீது எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டிருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி நாள்கள், கல்லூரிப் படிப்பு, ஆசிரியப் பணி வாழ்க்கை, போராட்டங்களில் பங்கெடுத்துச் சிறை சென்றது, கலை இரவு மேடைப் பாடகராகவும் பேச்சாளராகவும் பாமரர்கள், படித்தவர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்ட பிரபலங்களையும் பெரிதும் கவர்ந்த பேச்சாளராகத் திகழ்ந்தது, ‘கங்கா கெளரி’ உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்தது, முதலில் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் திமுகவின் கொள்கைப் பேச்சாளராகவும் இருந்த அரசியல் அத்தியாயங்கள் என அனைத்து அனுபவங்களையும் அவருடைய பட்டிமன்ற உரைகளைப் போலவே நகைச்சுவையுடன் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் எழுதியிருக்கிறார் லியோனி. இன்றைய தலைமுறையினரால் பட்டிமன்ற நடுவராக அறியப்பட்ட லியோனியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது.

- கோபால்

வளர்ந்த கதை சொல்லவா...

திண்டுக்கல் லியோனி

அசிசி பதிப்பகம், திண்டுக்கல்

விலை: ரூ.320

தொடர்புக்கு: 8124006301

SCROLL FOR NEXT