வலைஞர் பக்கம்

ஆதிதிராவிடர் நிலம் வாங்க தாட்கோ மூலம் கடனுதவி

கி.பார்த்திபன்

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.

#விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க தாட்கோ மூலம் வங்கிக் கடனுதவி பெற முடியுமா?

ஆதிதிராவிட பெண்கள் தங்களது பெயரில் நிலம் வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஆதிதிராவிட மக்களின் நில உடமையை அதிகரிப்பதோடு, விவசாய உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

#அதிகபட்சம் எத்தனை ஏக்கர் நிலம் வாங்க முடியும்?

புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரையும், நன்செய் நிலமாக இருந்தால் 2.5 ஏக்கர் வரையும் வாங்கலாம். இந்த திட்டத்தில் உத்தேசித்துள்ள நிலத்தை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேர்வு செய்யவேண்டும். நிலம் வாங்கும்போது முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

#நிலம் வாங்கும் திட்டத்தில் எந்த அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது?

அரசு வழிகாட்டு மதிப்பு (கைடுலைன்) அடிப்படையில் நிதியுதவி கணக்கீடு செய்யப்படும். மேலும், திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது ரூ.2.25 லட்சம் இந்த இரண்டில் எது குறைவோ அது சம்பந்தப்பட்ட பயனாளிக்கு மானியமாக வழங்கப்படும். எஞ்சிய தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.

#நிலம் வாங்கும் திட்டத்துக்கான தகுதி, வழிமுறைகள் என்ன?

ஆதிதிராவிடப் பெண்ணாக இருக்கவேண்டும். 18 வயதுக்கு மேல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். நிலம் இல்லாதவராக இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும். நில உரிமையாளருடன் விலை குறித்து பேசி ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்.

#இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்?

அந்தந்த மாவட்ட தலைநகரில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். அல்லது http://application.tahdco.com என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், வாங்க உத்தேசிக்கப்பட்ட நில கிரய ஒப்பந்தம், வில்லங்கச் சான்று, சிட்டா அடங்கல் ஆகியவற்றை இணைக்கவேண்டும்.

#ஏற்கெனவே நிலம் இருந்தால் அதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?

நில மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டமும் உள்ளது. விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் நிலத்தை மாற்றுவது என்பது உள்பட தேவையான நில மேம்பாட்டு ஆதாரங்களை (பம்ப்செட் அமைத்தல், சொட்டுநீர்ப் பாசனம்) உறுதிசெய்ய இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதன் கீழ் வழங்கப்படும் கடனுதவியில் மானியமும் உண்டு.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT