பிரபல வங்கமொழி படைப்பாளியும் நவீன வங்காள இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவருமான விபூதிபூஷண் பந்தோபாத்தியாய பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
• கிழக்கு வங்காளத்தில் பாஸிர்ஹட் பகுதியில் பாணிதர் என்ற கிராமத்தில் பிறந்தார் (1894). இவர் தந்தை சமஸ்கிருத பண்டிதர்; தொழில்முறை கதக் கலைஞர் மற்றும் கதை சொல்பவர். இவ்வளவு திறன்கள் பெற்றிருந்தாலும், குடும்பம் வறுமையில் வாடியது. ஆனாலும் தன் பிள்ளைகளைக் கஷ்டப்பட்டுப் படிக்கவைத்தார். இவரது குழந்தைப் பருவம், பாரக்புர் கிராமத்தில் கழிந்தது. பொங்கோன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். சிறந்த மாணவராக விளங்கினார்.
• சிறு வயது முதலே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். நிறைய நூல்களை வாசித்தார். பள்ளிப் படிப்புக்குப் பின் கல்கத்தாவில் உள்ள சுரேந்திரநாத் கல்லூரியில் பொருளாதாரம், வரலாறு, சமஸ்கிருதம் பயின்று பட்டம் பெற்றார். முதுகலைப் படிப்பும் சட்டமும் பயில்வதற்காக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
• ஆனால் பொருளாதார நிலை காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்டு, வருமானம் ஈட்டப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். ஹூக்ளியில், ஜங்கிபாரா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். கோரக்ஷ்ணி சபாவிலும் பணியாற்றினார். பல்வேறு பணிகளுக்கு நடுவில் இலக்கிய ஆர்வத்தையும் தக்கவைத்துக்கொண்டிருந்தார்.
• பொருளாதார நிலவரம் ஓரளவு சரியானதும் எழுத ஆரம்பித்தார். 1921-ல் வங்காளத்தில் உள்ள பிரபோஷி என்ற பிரபல பத்திரிகையில் உபேக்ஷிதா என்ற இவரது முதல் சிறுகதை வெளிவந்தது. 1928-ல் வெளிவந்த பதேர் பாஞ்சாலி நாவலும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த அபராஜிதோ நாவலும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றத் தந்தன. இவை விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவை வங்க இலக்கியத்தில் இவருக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றுத்தந்தன.
• இவரது பெரும்பாலான படைப்புகளின் கதைக்களம் வங்காளத்தின் கிராமப்புறப் பகுதிகளாகவே இருந்தன. இவர் எழுத ஆரம்பித்த சமயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகச் சீரழிவுகள் குறித்தே பலரும் ஆராய்ந்தும் எழுதியும் வந்தனர். ஆனால் இவரோ மக்களின் எளிய வாழ்க்கை முறை, வங்காளத்தின் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள அழகிய சுற்றுச்சூழல், வங்க மக்கள் ஆகியவற்றைச் சுற்றியே எழுதிவந்தார். எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதும் யதார்த்தவாத பாணி இவரது மற்றொரு தனி முத்திரை.
• கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வனப்பகுதியில் வெகு தூரம் நடந்து தனிமையில் வாசிப்பார். இவர் எழுதுவதும்கூட அதே அமைதியான சூழலில்தான். இவர் எழுதிய அபுர் சன்ஸார் நாவல் உள்ளிட்ட பல நாவல்கள் ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது எழுத்துக்களால் மிகவும் கவரப்பட்ட சத்தியஜித் ரே, இவரது படைப்புகளை வாசிக்குமாறு திரைக்கதை எழுதும் மாணவர்களிடம் பரிந்துரைத்தார்.
• ஆதர்ஷ் இந்து ஹோட்டல், பிபினர் சன்சார், பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, ஆரண்யக், சந்தேர் பஹார், ஹீரா மானிக் ஜ்வாலே, அனுபர்த்தன், கோசி திருஷ்டி பிரதீப், தேப்ஜன், ஆஷானி சங்கேத், கேதார் ராஜா, தம்பதி, சுந்தர் பனே சத் பத்சார், துயி பாரி கஜோல், மிஸ்மிந்தர் கபேச் உள்ளிட்ட இவரது படைப்புகள் வங்க இலக்கியத்தை வளம்பெறச் செய்தன.
• பதேர் பாஞ்சாலி என்ற சுயசரிதை நாவல் இவரது தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வெளிவந்த அபராஜிதோ நாவலையும் பின்னாளில் சத்யஜித் ரே திரைப்படங்களாக உருவாக்கினார். இவை இரண்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தலைசிறந்த திரைப்பட வரிசையில் முன்னணி இடம் பெற்றன. பதேர் பாஞ்சாலி நாவல், சிபிஎஸ்சி பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது.
• இச்சாமதி என்ற இவரது நாவலுக்காக இவருக்கு கிழக்கு வங்கத்தின் தலைசிறந்த இலக்கிய விருதான ரபீந்திர புரஸ்கார் விருது கிடைத்தது. மேலும் பல்வேறு விருதுகளும் கவுரவங்களையும் பெற்றார். இந்த நாவல், பிரிக்கப்படாத வங்காளத்தில் பாய்ந்த இச்சாமதி நதிக் கரையில் வாழ்ந்து வந்த மக்களின் தொழில், வாழ்க்கை, ஜாதி அமைப்புகள், பொருளாதார நிலவரம் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியிருந்தது.
• வங்க இலக்கியத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவரும் லட்சக்கணக்கான வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட படைப்புகளைத் தந்தவருமான விபூதிபூஷண் பந்தோபாத்தியாய 1950-ம் ஆண்டு நவம்பர் மாதம் 56வது வயதில் மறைந்தார்.