புகழ்பெற்ற தபேலா கலைஞர்
உலகப் புகழ்பெற்ற இந்திய தபேலா கலைஞரும் நவீன தபேலாக் கலையின் முன்னோடிகளுள் ஒருவருமான கிஷன் மஹாராஜ் (Kishan Maharaj) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பனாரசில் கபீர் சவுரா என்ற இடத்தில் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தார் (1923). கிருஷ்ண ஜெயந்தி அன்று நள்ளிரவில் பிறந்ததால் இவருக்கு கிஷன் எனப் பெயர் சூட்டப்பட்டது. தந்தை பிரபல தபேலா கலைஞர். ஆரம்ப காலத்தில் தந்தையிடம் தபேலா கற்றார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.
# புகழ்பெற்ற தபேலா கலைஞரும் இவரது சித்தப்பாவுமான பண்டிட் கண்டே மஹாராஜிடம் பயிற்சியைத் தொடர்ந்தார். இசைப் பயிற்சிக்கு அதிக நேரம் வேண்டும் என்பதால் இவர்கள் குடும்பத்தில் யாருமே உயர்நிலைப் பள்ளியைத் தாண்டியதில்லை. 11 வயதிலிருந்தே கச்சேரிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.
# ஒருசில ஆண்டுகளிலேயே தலைசிறந்த பாடகர்களான பீம்சேன் ஜோஷி, ரவி சங்கர், ஃபியாஸ் கான், ஓம்கார்நாத் தாகூர், படே குலாம் அலி கான், உஸ்தாத் அலி அக்பர் கான் உள்ளிட்ட பிரபலங்களுடன் கச்சேரியில் கலந்துகொண்டார்.
# தனித்துவம் வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட தனது இசைத் திறனால் ரசிகர்களை வசீகரித்தார். சிதார், ஸரோட், த்ருபத், தமார் இப்படி எந்த இசையோடும் இயைந்து வாசிக்கும் அற்புதத் திறன் கொண்டிருந்தார்.
# ஷம்பு மகராஜ், சித்தாரா தேவி, நடராஜ் கோபி கிருஷ்ணா, பிர்ஜு மகராஜ் உள்ளிட்ட பல பிரபல நடனக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் ‘சங்கத்’ வாசித்தார். இசைக் கலைஞர்களின் உரிமைகளுக்காகவும் கலைஞர்கள் அனைவரையும் அரசு ஒரே விதமாக நடத்த வேண்டும் என்பதற்காகவும் போராடினார்.
# பிரபல மிருதங்க வித்வான், பாலக்காடு ரகுவுடனான இவரது தாள வாத்தியக் கச்சேரி இன்றும் இசைக் கலைஞர்களால் நினைவு கூரப்படும் இசை விருந்தாக அமைந்தது. இந்தியா முழுவதும் இவரது கச்சேரிகள் நடைபெற்றன. பண்டிட் ரவிசங்கரின் நெருங்கிய நண்பரான இவர், அவருடன் இணைந்து தொடர்ந்து 6 மணி நேரம் தபேலா வாசித்தார்,
# 1965-ம் ஆண்டு காமன்வெல்த் விழாவில் இவரது இசைநிகழ்ச்சி நடைபெற்றது. ஒருமுறை தொடர்ந்து 8 மணி நேரம் தனிக் கச்சேரியாக தபேலா வாசித்தார். அப்போதெல்லாம் களைப்பு ஏற்பட்டதில்லையா என்று கேட்கப்பட்டபோது, சிறு வயதில் அப்பாவிடம் தபேலா கற்ற சமயத்தில், சில நாட்கள் இரவு தொடங்கி, விடிய விடிய பல மணி நேரம் பயிற்சி பெற்றதை நினைவு கூர்ந்தார்.
# இவரது மாணாக்கர்களில் சுக்வீந்தர் சிங், பண்டிட் நந்தன் மேத்தா, ஹிமான்ஷு மஹந்த், பாலகிருஷ்ண ஐயர் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிறந்த ஓவியர், சிற்பி, ஜோதிடர் மற்றும் கவிஞராகவும் பரிணமித்தவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
# ‘இன்றைய’ தினம்தான் முக்கியம் என்ற கண்ணோட்டம் கொண்டிருந்தவர். இந்திய சாஸ்திரிய கலைகளுக்கு இவரது பங்களிப்புகளுக்காக 1973-ல் பத்மஸ்ரீ விருதும், 2002-ல் பத்மவிபூஷண் விருதும் வழங்கப்பட்டன. லய பாஸ்கர், சங்கீத் சாம்ராட், தால் சிந்தாமணி, லய சக்ரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களைப் பெற்றவர்.
# காசி ஸ்வர் கங்கா சம்மான், சங்கீத் நாடக அகாடமி சம்மான் உள்ளிட்ட பல கவுரவங்களும் இவரைத் தேடி வந்தன. இந்தியப் பாரம்பரிய இசைக்கு பெருமை சேர்த்த தபேலா மேதை பண்டிட் கிஷன் மஹாராஜ் 2008-ல் தமது 85வது வயதில் மறைந்தார்.