வலைஞர் பக்கம்

தேநீர்க் கவிதை: அவள் இல்லாத...

முத்து சுகா

அவள் இல்லாமல்

சபிக்கப்பட்ட

என் பொழுதுகள்

விடிந்துகொண்டிருக்கின்றன

ஏழு மணிக்கும்

எட்டு மணிக்கும்.

ஜீவனில்லாத

வீட்டுக்கு

எத்தனை கதவு..?

எத்தனை பூட்டு..?

எப்போதும்

ஊளையிடும்

ஜன்னல் காற்றுகூட

உன்னைத்தான்

கேட்கிறது.

நீ

தொட்டெடுக்கக்

காத்திருக்கும்

வாசற்படி

செய்தித்தாளாய்

நான்.

அருகில் இருந்தாலும்

அப்பால் இருந்தாலும்

என் எழுத்துகளை

கவிதையாக்கும்

வல்லமை

யாருக்கு வரும்

உன்னைத் தவிர.

வாயால்

ஊதுவார்களே

காயத்தின்மீது

வலி தாங்க...

உன் நினைவுகளால்

ஊதிக்கொள்கிறேன்

என்னை.

உறக்கமில்லாத

இரவுகளுக்குத் தெரியும்

என்னைப் பற்றி...

இரக்கமில்லாத

உறவுகளுக்கு

என்ன தெரியும்?

காற்றில்

அடித்துக்கொள்ளும்

காயப்போட்ட

துணியாய்

அலைகிறதென்

மனது.

உன் தீண்டலில்

உயிர்த்திடக் காத்திருக்கும்

நெருப்போடு...

எரியாத அடுப்பும்

பிறர் அறியாத

என் துடிப்பும்.

நீ

ஊர் திரும்பும்

நாளை

என்

உயிர் திரும்பும்

நாளாய்

மாற்றுகிறதே...

இந்தக் காதல்.

பிடித்து

வைத்திருக்கிறேன்

இந்த மூச்சை...

உன்

முந்தானைக் காற்றில்

மூச்சுத் திணற.

விடியாத இரவுகளின்

முடியாத கனவுகளில்

உயிர்ப்புக்கும் பிழைப்புக்கும்

நடுவே ஒரு தவிப்பு...

இந்தக் காதல்.

வர மறுக்கும்

மழைக்கும்

வீசாத தென்றலுக்கும்

எப்படித் தெரியும்

நீ ஊருக்குப் போன சேதி?

SCROLL FOR NEXT