வலைஞர் பக்கம்

சார்லஸ் மார்ட்டின் ஹால் 10

செய்திப்பிரிவு

அமெரிக்க ஆராய்ச்சியாளர்

அலுமினியம் பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

$ அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் தாம்சன் என்ற நகரில் (1863) பிறந்தார். தந்தை மதபோதகர். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்றார். மிகச்சிறிய வயதிலேயே அம்மாவிடம் படிக்கக் கற்றார். 6 வயதில் அப்பாவின் பட்டப்படிப்பு வேதியியல் புத்தகத்தைப் படித்து முடித்தார்.

$ வேதியியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நிறைய நூல்களைப் படித்தார். பிரபல கண்டுபிடிப்புகள் குறித்த ‘சயின்டிபிக் அமெரிக்கன்’ என்ற இதழைத் தொடர்ந்து படித்தார். வீட்டிலேயே சோதனைக்கூடம் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொண்டார்.

$ சிறுவயதிலேயே இசை ஆர்வமும் இருந்ததால், உயர் கல்வியில் இசையையும் ஒரு பாடமாகப் பயின்றார். 1885-ல் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒருமுறை இவரது பேராசிரியர் ஒருவர், ஒரு அலுமினியத் துண்டைக் காட்டி, ‘இதை எளிதான முறையில் தயாரிப்பவர் பெரும் செல்வந்தர் ஆவார்’ என்று கூறினார். உடனே அதுதொடர்பான சோதனையில் இறங்கினார்.

$ ஆரம்பத்தில் ஓபெர்லின் கல்லூரி ஆய்வகத்தைத் தனது சோதனைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். பின்னர், தனது வீட்டில் ஓர் அறையை ஆய்வுக்கூடமாக மாற்றினார். வேதியியலாளரான சகோதரி மற்றும் அறிவியல் பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

$ எட்டு ஆண்டுகள் ஓய்வின்றிப் பாடுபட்டார். 1886-ல் ரசாயனக் கலவைகளை மின்பகுப்புக்கு உட்படுத்தி அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். இதற்கு காப்புரிமையும் பெற்றார். ஏறக்குறைய இதே சமயத்தில், பிரான்ஸ் விஞ்ஞானி பால் ஹெரால்டு இதே முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். எனவே, இந்த முறை ‘ஹால் ஹெரால்டு செய்முறை’ என்று குறிப்பிடப்பட்டது.

$ பிட்ஸ்பர்க் சென்றவர், அங்கு சில முதலீட்டாளர்களின் உதவியுடன் பிட்ஸ்பர்க் ரிடக் ஷன் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் இது ‘அலுமினியம் கம்பெனி ஆஃப் அமெரிக்கா’ எனப் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் குறைந்த செலவில் வர்த்தக ரீதியாக அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டது. இதனால் அலுமினிய உற்பத்தி பெருகியது. விலையும் குறைந்தது.

$ 25 ஆண்டு காலம் கடினமாக உழைத்து அலுமினியத் தொழில் துறையில் மாபெரும் வளர்ச்சி பெற்றார். இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட உலோகம் அலுமினியம்தான். இரும்புடன் சேர்ந்து உலகிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய உலோகங்களில் ஒன்றாக இது மாறியது.

$ வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். வாழ்நாள் முழுவதும் எதையாவது கண்டுபிடித்தவாறே இருந்தார். மொத்தம் 22 கருவிகளுக்கு காப்புரிமை பெற்றார். இவற்றில் பெரும்பாலானவை அலுமினியத்தால் ஆனவை. இவர் பயின்ற கல்லூரியில் இவருக்கு அலுமினியத்தால் சிலை அமைத்தனர்.

$ அரிதான உலோகமாகக் கருதப்பட்ட அலுமினியத்தை சுலபமாகக் கிடைக்கச் செய்து, பல்வேறு விதத்திலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய உலோகமாக மாற்றினார். இரும்புக்கு மாற்றாக தற்போதும் பரவலாக அலுமினியம் பயன்படுத்தப்படுவதற்கு இவரே மூலகாரணம்.

$ அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், மனித வரலாற்றில் உலோகங்களின் பயன்பாட்டு வரலாற்றையே மாற்றியமைத்த சார்லஸ் மார்ட்டின் ஹால் 51-வது வயதில் (1914) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

SCROLL FOR NEXT