புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் தமிழ்ப் பொங்கல் விழாவில் மறைந்த அவ்வை நடராசனாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கவின்மிகு நகரமாகக் கருதப்படுவது கொல்கத்தா. இதற்கு, கலைகள் மேல் காதல் கொண்ட நகரம் என்ற பெயரும் உண்டு. கனி போல் மனதுடைய மக்கள் கொண்ட நகரத்தில் கன்னித் தமிழ் மக்களை நேசிப்பவர்களும் உள்ளனர். காளி அன்னையவள் வீட்டிருக்கும் இந்த கொல்கத்தாவில் பொங்கல் விழா நடைபெற்றது. இம்மாநகரத்தில் கன்னித்தமிழ் வளர்க்கும் கவி பாரதியின் பேர் கொண்ட பாரதி தமிழ் சங்கம் உள்ளது.
கடந்த 18 வருடங்களாக இதில் பாரதி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாதனைத் தமிழர் விருது வழங்கும் நிகழ்வும் நடத்தப்பட்டுகிறது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்திற்கான இந்த விருதை, பல பெருமைகளுக்குரிய முனைவர் அவ்வை நடராசனுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஒப்புதலும் பத்மஸ்ரீ அவ்வை நடராசனிடம் பெறப்பட்டது. இதனிடையில் அவர், மறைந்து விட்டமையால்ம் தன் தந்தையின் விருதை பெற்றுக்கொள்ள மகன் முனைவர் அவ்வை அருள் இசைவளித்திருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் நூறு வருடங்களுக்கும் மேலாக செயல்படும் தேசிய உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடத்தப்பெற்றது. இப்பள்ளியானது, மேற்கு வங்க மண்ணிற்கும் கொல்கத்தா வாழ் தமிழ் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது. இங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரதி தமிழ் சங்கத்தின், தலைவரான சம்பத்குமார், அவ்வை நடராசனாரின் வாழ்நாள் சாதனைத் தமிழர் விருதினை, தனயன் முனைவர் அவ்வை அருளிடன் வழங்கினார்.
விருதினை பெற்ற முனைவர் அவ்வை அருள் ஆறிய ஏற்புரையில் பேசியதாவது: "ஒளவை" என்று சொன்ன மாத்திரத்திலேயே மேடைகளில் பொங்கிப் பெருக்கெடுத்து அவையினரின் செவிகளில் தமிழமுது பாய்ச்சும் நாவுக்கரசர், நற்றமிழறிஞர், முனைவர், பேராசிரியர் 'நடராசப் பெருந்தகையின் திருவுருவம் மனக்கண்ணில் துலங்கித் தெரியும். இவர் பச்சையப்பன் கல்லூரி மாணவராக விளங்கிய போதிலேயே இவரது சொல்லாற்றல் கண்டுவியந்த சுரதா, இவரைப் 'பாதி அண்ணா" என்று பாராட்டிச் சென்றார்.
அவருடைய நுட்பமான அறிவு, சங்க இலக்கியம், உள்ளிட்ட பழம்பெரும் இலக்கியங்கள் தொடங்கி புராண, இதிகாச இலக்கியங்களுக்கு வந்தது. அதன் பிறகு, தமிழ் இலக்கிய வரலாறு என்று நாம் எதைப் படிக்கிறோமோ அதற்கு கை, கால் முளைத்தால் அது தான் எந்தையார் அறிஞர் ஒளவை நடராசன். இதில், அதன் பிறகு புதுக்கவிதை, கவிக்கோ அப்துல் ரகுமான், சிற்பி, முருகுசுந்தரம் இன்னும் பின்னால் வந்த நா.காமராசன், மு.மேத்தா இப்படி ஒரு மிகப்பெரிய ஆற்றொழுக்கானவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இத்தகைய பெருமைகளுக்குரிய ஔவை நடராசனுக்கு இந்தக் கொல்கத்தா மண்ணில் வாழ்நாள் சாதனைத் தமிழர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது எங்களை நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது'' எனத் தெரிவித்தார். இவ்விழாவில், மேற்கு வங்க அமைச்சர் சசி பாஞ்சாவும் சட்டமன்ற உறுப்பினரான தேபாஷிஷ் குமார், டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்ச் சங்க செயலாளர் புகழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.