பழங்குடியினப் பெண்களுக்கு கடன் திட்டங்களில் முன்னுரிமை பழங்குடியினப் பெண்களுக்கான சுய தொழில் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவி திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.
#பழங்குடியினப் பெண்கள் மேம்பாட்டுக்கு என பிரத்யேகமாக தாட்கோவில் திட்டங்கள் இருக்கிறதா?
வளர்ந்த சமூகத்திலேயே பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு சில சலுகைகள் அதிகமாகவே வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பழங்குடியினப் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆதிதிராவிடர் சமூகப் பெண்களுக்கு கடன் திட்டங்களில் கூடுதல் மானியம், முன்னுரிமை வழங்கப்படுவதுபோல பழங்குடியினருக்கான திட்டங்களிலும் ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
#பழங்குடியினப் பெண்கள் சுய தொழில் தொடங்க திட்டம் உள்ளதா?
பழங்குடியினப் பெண்கள் சுய தொழில் தொடங்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவித் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற பழங்குடியினப் பெண்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட குழுவை அமைக்கவேண்டும். குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். வேறு எந்த திட்டத்திலும் சுழல் நிதி பொருளாதார கடனுதவி பெற்றிருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே உறுப்பினராக இருக்கவேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருக்கவேண்டும்.
#மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கும் சுழல் நிதியில் மானியம் உள்ளதா?
மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்கு பிறகு, பல்வேறு தொழில்களில் சிறப்பாக தரம் பிரித்திருந்தால் வங்கியில் சுழல் நிதி பெறுவதற்கு தாட்கோ மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பெறும் சுழல்நிதியில் மானியம் நீங்கலாக வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தினால் போதும்.
#தரம் பிரித்தல் என்றால் என்ன?
அதாவது ஒரு குழுவில் 12 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்றால், அதில் 4 பேர் இணைந்து ஒரு தொழிலை சிறப்பாக நடத்திவர வேண்டும். இன்னும் 4 பேர் இன்னொரு தொழிலை சிறப்பாக நடத்துதல் வேண்டும். இப்படி ஒரே குழுவில் உட்குழுவாக பல்வேறு தொழில்களை சிறப்பாக நடத்துவதை எங்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இதையே ‘தரம் பிரித்தல்’ என்கிறோம். தொழில் வளர்ச்சி அடைந்த குழுவினர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இன்னொரு முறை தரம் பிரித்தல் நடக்கும்.
#பழங்குடியினப் பெண்களுக்கு வேறு கடனுதவி திட்டங்கள் உள்ளதா?
பொருளாதார கடனுதவி திட்டம் உள்ளது. மேற்கண்ட நிபந்தனைகளே இந்த திட்டத்துக்கும் பொருந்தும். ஆனால், குழு இருமுறை தரம் பிரித்தல் செய்திருக்க வேண்டும். வேறு அரசு திட்டத்தில் பொருளாதார கடனுக்கான மானியம் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தில் அதிகபட்சம் 50 சதவீதம் அல்லது ரூ. 3.75 லட்சம் - இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)