ஸ்காட்லாந்து வானியலாளர், கணிதவியலாளர்
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வானியலாளரும் கணிதவியலாளருமான தாமஸ் ஜேம்ஸ் ஆலன் ஹென்டர்சன் (Thomas James Alan Henderson) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஸ்காட்லாந்தின் டண்டீ நகரில் பிறந்தவர் (1798). தந்தை, வணிகர். அதே ஊரில் ஆரம்பக் கல்வியும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியும் பயின் றார். கணிதம், அறிவியலில் சிறந்து விளங்கினார். வானியல் குறித்தும் ஆர்வம் கொண்டிருந்தார். 15 வயதில் சட்ட அலுவலகத்தில் பணியாற்றினார். எடின்பரோவில் பல பிரபுக்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.
# அங்கு வானியல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த கால்டன் ஹில் அப்சர்வேட்டரிக்கு அடிக்கடிப் போய்வரும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவ்வப்போது சட்டப் பணி தொடர்பாக லண்டன் சென்ற சந்தர்ப்பங்களில், ஜி.பி.ஏரி, ஜான் ஹெர்ஷல் உள்ளிட்ட சிறந்த வானியலாளர்களின் நட்பைப் பெற்றார்.
# கால்டன் ஹில் அப்சர்வேட்டரியில் அனைத்துச் சாதனங்களையும் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளும் சலுகை பெற்றார். ஆனால், கண்பார்வை சரியாக இல்லாததால், வானியல் கணக்கீடுகளில் கவனம் செலுத்தலாம் என முடிவெடுத்தார்.
# இங்கிலாந்தில் அப்போது பொதுவாகப் பயன்படுத்தப்படாத கணக் கீட்டு முறைகளைப் பயன்படுத்தி ஏராளமானக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இவை புகழ்பெற்ற வானியலாளர்களின் கவனத் தைக் கவர்ந்தன. நிலவின் இடைமறைவைப் (occulation) பயன் படுத்தி பூமியின் தீர்க்கரேகையைக் காணும் புதிய முறையைக் கண்டறிந்தார்.
# இது, ராயல் கடற்படையின் கடலளவை வரைபடக் கண்காணிப்பாளர், தாமஸ் யங்கின் கவனத்தைக் ஈர்த்தது. தன் மரணத்துக்குப் பிறகு தன் பதவியை இவருக்கு வழங்குமாறு பரிந்துரை செய்திருந்தார். இதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை ராயல் அப்சர்வேட்டரியில் முக்கிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
# ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தி தெற்குப் பகுதியில் உள்ள நட்சத்திரங்களின் இடங் களைக் குறித்த பட்டியல் தயாரிப்பு, சூரியன், நிலவின் தொலைவு, வால்நட்சத்திரங்களின் கண்காணிப்பு உள்ளிட்ட அபாரமான வானியல் கண்காணிப்புத் திட்டத்தை மேற்கொண்டார். 1832 - 1833-ல் ஏராளமான விண்மீன் அளவீடுகளைக் கண்டறிந்தார்.
# இடமாறு தோற்றப்பிழையைப் (Parallax) பயன்படுத்தி விண் மீனின் தொலைவைக் கண்டறிந்தார். உடல்நலக் குறைவால் பதவி ஓய்வு பெற்று எடின்பரோ திரும்பிய இவர், வானிலை ஆராய்ச்சி களைத் தொடர்ந்தார். முதன்முதலாக பூமியில் மிக அருகில் உள்ள நட்சத்திர அமைப்பான ஆல்ஃபா சென்டாரியின் (Alpha Centauri) தொலைவைக் கண்டறிந்து கூறியவர் இவர்தான்.
# ஆனால், உடனடியாக தன் கண்டுபிடிப்புகள் குறித்து வெளியிட வில்லை. இதனால், இதேபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த வேறொரு விஞ்ஞானி இதை வெளியிட்டார். தன் ஆய்வு முடிவுகளை 1839-ல் வெளியிட்டதால், இவர் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்காட்லாந்து அரசு இவரைத் தனது முதல் வானியலாளராக நியமித்தது.
# எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர், ஸ்காட்லாந்து ராயல் வானியலாளர் ஆகிய இரண்டு பொறுப்புகளும் இவருக்குக் கிடைத்தன. 1834 முதல் பத்தாண்டுகள், உதவியாளரோடு இணைந்து பல ஆராய்ச்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.
# ஏறக்குறைய 60 ஆயிரம் அப்சர்வேஷன்களை மேற்கொண்டார். கண்காணிப்புகளுக்காக தினமும் மலையேறுதல், கணக்கீடுகள், ஆய்வுகள் என மும்முரமாக சுழன்றதால், உடல் நலம் பாதிக்கப்பட்ட தாமஸ் ஜேம்ஸ் ஆலன் ஹென்டர்சன் 1844-ம் ஆண்டு 46-வது வயதில் மறைந்தார்.