ஒருவகையில் காலம் வகுத்த பாதையிலேயே ஜெயல்லிதாவின் பயணம் சென்றது என்று சொல்லலாம். அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், காலம் அவரைத் திரைத்துறை நோக்கித் தள்ளியது. 1965-ல் ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படம் வெண்ணிற ஆடை வெளிவந்தது. தமிழ்நாட்டின் தலைசிறந்த இயக்குநர் சி.வி. ஸ்ரீதர் பல புதுமுகங்களை அத்திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். வெண்ணிற ஆடை என்ற பட்டப் பெயருடன் நிர்மலா, மூர்த்தி ஆகியோர் இன்றும் அழைக்கப்படுகின்றனர்.
மிகவும் வேறுபட்ட அந்தத் திரைப்படம் ரசிகர்களால் ஊகிக்க முடியாத ஒரு திருப்பத்தோடு நிறைவு பெறும். முதல் படத்திலேயே பக்குவமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தார் ஜெயலலிதா. ஆனால் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்றிதழ் தரப்பட்டதால் திரையரங்குக்குச் சென்று ஜெயலலிதாவால்கூட அந்தத் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை.
நுட்பமான கதைக்காக அப்படி சான்றிதழ் தரப்பட்டிருந்தது. ஜெயலலிதா ஏற்று நடித்த கதாபாத்திரம் பாடும் பாடல்களை பி.சுசீலா பாடியது இன்றைக்குக் கேட்டாலும் நெஞ்சை உருக்குவதாகவே இருக்கும். தான் நடித்த முதல் திரைப்படம் நன்கு பாராட்டப்பட்டாலும் வசூல் மழை பொழிந்தாலும் நடிகையாகத் தனது வாழ்க்கையைத் தொடர ஜெயலலிதா விரும்பவில்லை. ஆனால் குடும்பத்தில் அடுத்தடுத்து சோதனைகளாக வந்து வறுமை தீவிரமானது. எனவே முடிவை மாற்றிக்கொண்டு கலைத்துறையில் தொடர்ந்தார்.