வலைஞர் பக்கம்

தேநீர் கவிதை: மழை

எஸ்.ராஜகுமாரன்

மழை நனைதல்

தவம்.

குழந்தைகளுடன் நனைதல்

வரம்.

பகல் முழுதும்

மழையுடன்

விளையாடிக் களைத்த

குழந்தை

தூங்கிப் போனாள்.

மழையும் ஓய்ந்து

தூங்கியது.

அதன் பின்

தொடங்கிற்று

பிறிதொரு

சிறுமழை -

கிளைகளினூடே

துளிகளாகவும்

கனவு காணும்

குழந்தையின் இதழ்களில்

புன்னகையாகவும்.

இங்க

செம மழ.

ஜாலியா நனையிறோம்

அங்க மழயா என்ற

ஒரு குழந்தையின்

தவறான செல்பேசி அழைப்பை

சட்டென சரியானதாக்கி

பாவனை மழையில்

நானும் நனைந்தேன்.

பெயர் தெரியாத குழந்தையின்

வார்த்தைகளில் நனைய

கொடுத்து வைக்க வேண்டுமே!

SCROLL FOR NEXT