‘‘சார்..!’’
வாசலில் குரல் கேட்டு எட்டிப் பார்த்தார் முரளி. அந்தத் தெருவில் அயர்ன் பண்ணுபவர், ஒரு 15 வயசு பையனுடன் நின்றுகொண்டிருந்தார்.
‘‘சார்.. இவன் என் பையன். . ஸ்கூலுக்குப் போக ஒரு சைக்கிள் வேணும்னு கேக்கறான். இந்த தெருவுல எல்லார் வீட்டிலும் கொஞ்சம் கடன் வாங்கி சைக்கிள் வாங்கித் தரலாம்னு கூட்டிட்டு வந்தேன். உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுங்க.. அயர்ன் பண்ணுற காசுல கொஞ்சம் கொஞ்சமா கழிச்சுக்கலாம்..” என்றார்.
அஞ்சு வருஷமாக அவரைத் தெரியும்.. நம்பிக்கையானவர்தான். முரளியும் ஒரு தொகையைக் கொடுத்தனுப்பினார். ஆனால் மகனையும் கூட்டிக்கொண்டு வந்து அவர் கடன் கேட்டது முரளிக்கு உறுத்தியது. சின்னப்பையன்.. இப்படி ஒவ்வொரு வீட்டிலும் அப்பா கடன் கேட்பது அவனுக்கு அவமானமாக இருக்காதா..?
அடுத்த நாள் அவரைப் பார்த்ததும் தன் மன உறுத்தலைச் சொன்னார்.
அயர்ன்காரர் சிரித்துக்கொண்டே, ‘‘சார்.. பையன் கேட்டது உபயோகமானதுன்னு கண்டிப்பா வாங்கித் தர்றேன்னு சொல் லிட்டேன்.. அதனால, அப்பாவுக்கு நம்ம மேல எவ்வளவு அன்புன்னு அவனுக்குப் புரியும். நியாயமானதைக் கேட்டா வாங்கித் தரு வார்னு நம்பிக்கையும் வரும். அதேசமயம், அதை வாங்க நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு அவனுக்குத் தெரியணும்.. அப்பத்தான் அவனுக்கு அதன்மேல் அக்கறையும், குடும்பப் பொறுப்பும் வரும்..’’ என்றார்.
படிக்காத ஒரு ஏழைத் தொழிலாளியின் தொலைநோக்குப் பார்வை முரளியை வியக்க வைத்தது!