தமிழுக்கு "கதியே கதி" என்று முதியோர் மொழிவர். இதில் 'க' என்பது கம்பன். 'தி' என்பது திருவள்ளுவன். பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செய்யுட்களை எழுதி, 'கவிச்சக்கரவர்த்தி' என்ற இமாலய அடை மொழியோடு குறிப்பிடப்படும் இலக்கிய இமயமே கம்பன். "கம்பன் கழகம்" என்ற அமைப்பின் மூலமாகத் தமிழகம் எங்கும் ஆண்டுதோறும் நடக்கின்ற கம்பன் விழாக்கள், தமிழக மக்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இலக்கியப் பெருந் திருவிழாவாகும்.
வெட்டியும் ஒட்டியும் வாதிடும் பட்டிமன்றங்களும், கற்பனைச் சுவைக் கலந்துக் கவிதா ராஜாங்கம் நடத்தும் கவியரங்கங்களும், கவனத்தையே சுவனமாக்கும் கருத்துப் பொழிவுகளும், மாணவர்களிடையே ஊக்கத்தை ஆக்க வைக்கும் உரைநிலைப் போட்டிகளும் - என ஏராளமான அம்சங்களோடுக் கம்பன் கழக நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.
இத்தகு வித்தகு உத்தமப் புத்திரன் கம்பன் பிறந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேரழுந்தூர். அங்கு "கம்பன் மேடு" என்ற பகுதி உண்டு. இதுதான் கம்பனின் அவதாரத் திருத்தலம். மத்திய அரசின், "இந்தியத் தொல்பரப்பாய்வு நிறுவனம்" இந்தப் பகுதியை நில ஆர்ஜிதம் செய்து, முறைப்படி முள்வேலி அமைத்து, "தொன்மைத் தன்மை மிக்கப் புராதானப் புதையல்"என்ற அறிவிப்புப் பலகைகளையும் அமைத்து வைத்திருக்கிறது.
கம்பனின் ஜனன பூமியைத் தரிசனம் செய்யத் தமிழ்த் தாத்தா உ வே சுவாமிநாதையர் வந்திருந்தார். அந்த ஊரில் உள்ள கம்பன் மேடு எல்லை வரை வந்த அவர், "கம்பன் ஜனித்த பூமியில் என் கால்கள் மிதி பட்டு அவமதிப்பு ஏற்படுவதா? " என்று அவதியுற்றார். எனவே முழங்கால்களாலேயே நடந்தூர்ந்துச் சென்று, கம்பன் மேடு பகுதியைத் தரிசித்தார்.
அந்த அளவுக்கான கம்பனின் பிறந்த திருத்தலம் இப்பொழுது கலங்கடிக்கும் துர்த்தலம் என மாறி இருக்கிறது. கம்பன் மேடு பகுதியில் செடிகள் வளர்ந்து, புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. எனவே மறைவு கருதி, தினந்தோறும் பொதுமக்கள் அங்கே இயற்கை உபாதைகளைக் கழித்து வருகின்றனர். இதனால் கம்பன் மேடு நம்ப முடியாத நாற்றத் தலமாக மாறி இருக்கிறது. ஆம்... நாறி இருக்கிறது.
இத்துடன் இணைத்து இருக்கின்ற கம்பன் மேடு படங்களை எடுக்கச் சென்ற போது துர்நாற்றம் தாங்காமல் கேமரா கூட முனகிப் போனது. கம்பனைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆனால் பிறந்த இடத்தைத் திரும்பிப் பார்க்கக்கூட ஆள் இல்லை.
"மத்திய அரசின் தொல்லியல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடம்" என்ற காரணத்தால் இதன் மீதான பராமரிப்பில் கவனம் செலுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கோ, மாநில அரசுக்கோ அதிகாரம் இல்லை. மத்திய அரசு மட்டுமே இதில் தலையிட்டுப் பராமரிப்புச் செய்ய முடியும். ஆனால் மத்திய அரசின் தொல்பரப்பாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல்கள் சென்று சேரவில்லை.
பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன் பிறந்த ஊர் தேரழுந்தூர் தான். கம்பன் மேட்டைக் கண்டுக் கலங்கித் துடித்து வரும் அவர், இது பற்றிய தகவல்களைத் தொகுத்து, மத்திய அரசின் அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கவனத்திற்கு முறைப்படியான வேண்டுகோள் மனுவை அனுப்பி வைத்திருக்கிறார். பாராளுமன்ற விவகாரங்கள் குழுவுடன் பண்பாட்டுத் துறையையும் சேர்த்து அந்த அமைச்சர் பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த வேண்டுகோள் கடிதம் முறைப்படி அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
"கம்பன் மேடு பகுதிக்கு வந்து, பார்வையிட்டு, வழிபாடு செய்ய வேண்டும்" என்று அவரையும் பிரதமரையும் அழைத்தும் அவர் அந்த கடிதத்தில் தனது வேண்டுகோளைக் குறிப்பிட்டு இருக்கிறார்.
- ஆர்.நூருல்லா, மூத்த பத்திரிகையாளர்