நோபல் பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர்
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் எரிக் ஸ்டார்க் மாஸ்கின் (Eric Stark Maskin) பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
*அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூதக் குடும்பத்தில் (1950) பிறந்த வர். நியூஜெர்சியில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பின்போதே, கணிதத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்தபோது, பொருளாதாரத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
*தகவல் பொருளாதாரம் (Information Economics) பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 1976-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஜீசஸ் கல்லூரியில் ஃபெலோவாக சேர்ந்தார். அப்போது, ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டார். பொருளாதாரத்தின் பல்வேறு களங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
*பாரீஸில் நடக்கும் பொருளாதார சங்கக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றார். ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மெக்கானிஸம் டிசைன்/ இம்ப்ளிமென்டேஷன் தியரி, டைனமிக் கேம்ஸ் ஆகிய களங்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் உலகப் புகழ்பெற்றன.
*அமெரிக்காவின் ‘எம்ஐடி’ கல்வி நிறுவனத்தில் துணைப் பேராசிரியராக சேர்ந்தார். ‘அங்கு பயிலும் அறிவாற்றல் மிக்க மாணவர்களுக்கு ஆசிரியராக இருப்பதே பெரிய சவால். அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவே அறிவைச் செம்மைப்படுத்திக் கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தன் மாணவர்களோடு சேர்ந்தும் கணிதம், பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டார். அவர்களுடன் இணைந்து பல நூல்கள் எழுதியுள்ளார்.
*மீண்டும் ஹார்வர்டு திரும்பியவர், 2000-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார். உடன் பணியாற்றிய ஆலிவர் ஹர்ட், மைக் வின்ஸ்டன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஜோன்ஸ் கோர்னி, அமர்த்யா சென் ஆகியோருடனும் நெருங்கிய நட்புறவு கிடைத்தது. அமர்த்யா சென்னிடம் சமூகத் தெரிவு கோட்பாட்டு நுட்பத்தைக் கற்றார்.
*சந்தைக்கு மாற்றாக மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்ற கோட்பாட்டுக்கு வித்திட்டவர்களில் ஒருவராகப் புகழ்பெற்றார். இதற்காக இவருக்கும் லியோனிட் ஹர்விக்ஸ், ரோஜர் மயெர்சன் ஆகியோருக்கும் கூட்டாக 2007-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
*பிரின்ஸ்டனில் உள்ள உயர்நிலைக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றினார். அமெரிக்காவின் முக்கியப் பொருளாதார வல்லுநர்களில் ஒருவராக உயர்ந்தார். உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் முக்கியப் பொருளாதார கருத்தரங்குகளில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வருகிறார்.
*பொருளாதாரத்தின் பெயரால் ஆரோக்கியம், கல்வியில் எந்தவித சமரசத்தையும் இவர் ஏற்றதில்லை. கல்வி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று கூறுவார்.
*ஜெருசலேமில் உள்ள தி ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் ‘தி இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் ஜெருசலேம் சம்மர் ஸ்கூல்’ கல்வி நிறுவன இயக்குநராக தற்போது பணியாற்றி வருகிறார். தேர்தல் விதிகள், சமத்துவமின்மைக்கான காரணங்கள், கூட்டணி உருவாக்கம் ஆகியன குறித்து ஆராய்ந்து வருகிறார். அமெரிக்க கலை, அறிவியல் அகாடமி, பொருளாதார சங்கம், ஐரோப்பிய பொருளாதார சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
*இன்று 67-வது வயதில் அடியெடுத்து வைக்கும் எரிக் ஸ்டார்க் மாஸ்கின் தற்போதும் ஆய்வு, ஆசிரியப் பணிகளோடு, ‘எகனாமிக் லெட்டர்ஸ்’ என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்