வலைஞர் பக்கம்

மேடம் சி.ஜே.வாக்கர் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

அமெரிக்க தொழிலதிபர், சமூக ஆர்வலர்

அமெரிக்காவின் பிரபல பெண் தொழிலதிபரான மேடம் சி.ஜே.வாக்கர் (Madam C.J.Walker) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் லூசியானா மாநிலம் டெல்டா என்ற கிராமத்தில் (1867) பிறந்தார். இயற்பெயர் சாரா பிரீட்லவ். பெற்றோர் பருத்தி தோட்ட அடிமைகளாக இருந்தவர்கள். இவர் பிறப்பதற்கு முன்புதான் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றனர்.

* சிறுவயது முதலே பருத்தி தோட்டத்தில் வேலை செய்த சாரா, 7 வயதுக்குள் தாய், தந்தையை இழந்தார். எழுதப் படிக்க கற்றார். அக்காவின் வீட்டில் அடைக்கலம் புகுந்த இவரை, அக்காவின் கணவர் மிக மோசமாக நடத்தினார்.

* இதில் இருந்து தப்பிக்க 14 வயதில் திருமணம் செய்துகொண்டார். ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆதரவாக இருந்த கணவரும் 2 ஆண்டுகளில் இறந்துவிட, வீட்டு வேலை, சமையல் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார். சகோதரர்களின் முடிதிருத்தும் நிலையத்தில் வேலை செய்தார். இரவு நேரப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.

* திடீரென்று இவரது முடி உதிரத் தொடங்கியது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதிர்கொண்ட பொதுவான பிரச்சினை இது. தானாக பலவித மூலிகைகளைச் சேர்த்து தைலம் தயாரித்து பயன்படுத்தினார். முடி உதிர்வது நின்றது.

* இதன்மூலம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கூந்தல் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று உணர்ந்தார். ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியிடம் வேலைக்குச் சேர்ந்து தொழில் நுணுக்கங்களைக் கற்றார். தனியாக தொழில் தொடங்கினார்.

* செய்தித்தாள் விளம்பரப் பிரிவில் பணிபுரிந்த சார்லஸ் ஜோசப் வாக்கரின் அறிமுகமும் ஆதரவும் கிடைத்தது. அவரைத் திருமணம் செய்துகொண்டார். தன் பெயரை ‘மேடம் சி.ஜே.வாக்கர்’ என்று மாற்றிக்கொண்டார். ‘சி.ஜே.வாக்கர்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, ஷாம்பு, அழகுசாதனப் பொருட்கள் தயாரித்தார். தொழில் வேகமாக வளர்ச்சி அடைந்தது.

* ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கு அழகுக்கலைப் பயிற்சிகளை அளித்தார். பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். அறக்கட்டளைகள் தொடங்கி, கறுப்பினக் குழந்தைகளுக்கு கல்வி, உதவித்தொகை, பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி மையம், ஆண்களுக்கு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொண்டு, தன் இன மக்கள் மட்டுமல்லாமல் பொது சமூகப் பணிகளுக்கும் தாராளமாக உதவினார்.

* பெண் தொழிலதிபர் என்பதுடன், தர்ம சிந்தனை, சமுதாய நோக்கு இவற்றால் அமெரிக்கா முழுவதும் பிரபலமானார். ‘சம்பாதிப்பதற்காக நான் தொழில் தொடங்கவில்லை. நானும் என் மக்களும் இந்த நாட்டில் உள்ள மற்றவர்களைப் போல முன்னேற வேண்டும் என்றுதான் தொடங்கினேன்’ என்றார். தேசிய அளவில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கான மாநாடு நடத்தி, பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினார்.

* லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று, அங்கும் தன் பொருட்களை அறிமுகம் செய்தார். தன் நிறுவனத்தின் கிளைகள் இல்லாத பகுதிகளுக்கு அஞ்சல் மூலம் பொருட்களை அனுப்பினார். கறுப்பினத்தவர் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதோடு, அதற்காக தாராளமாக நிதியுதவி வழங்கினார்.

* தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை அறக்கட்டளைகளுக்கு எழுதிவைத்தார். கடும் முயற்சியாலும், அறிவுக்கூர்மையாலும் அமெரிக்க பணக்காரப் பெண்களில் ஒருவராக உயர்ந்த மேடம் சி.ஜே.வாக்கர் 52-வது வயதில் (1919) மறைந்தார்.

SCROLL FOR NEXT