வலைஞர் பக்கம்

ஜெ.நினைவலைகள்: என்றும் நிலைத்திருக்கும் புகழ்!

செய்திப்பிரிவு

மரியாதைக்குரிய நண்பர்

திரைத்துறையில் எம்.ஜி.ஆர். மீது அவருக்கிருந்த அன்பைப் போல நடிகர்கள் நம்பியார், பாலாஜி, சோ போன்றவர்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். சக நடிகைகளில் சவுகார் ஜானகி, மனோரமா, எம்.என். ராஜம், சரோஜா தேவி, காஞ்சனா, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா உள்பட பலருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார்.

என்றும் நிலைத்திருக்கும் புகழ்!

எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசியல் பயணம் அவ்வளவு எளிமையாக இருக்கவில்லை. குறிப்பாக எம்ஜிஆரின் கடைசிக் காலத்தில் தொடங்கி அவருடைய மறைவை ஒட்டிய நாட்கள் வரை அவர் தொடர்ந்து குறிவைத்து ஒடுக்கப்பட்டார். ஆனால், எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் பிளவுபட்டு, நிலைக்குலைந்த அதிமுக ஒருகட்டத்தில் தானாகவே ஜெயலலிதாவை நோக்கி வந்தது. ஜெயலலிதா அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தி, சின்னத்தை மீட்டு, ஆட்சிக் கட்டிலிலும் அமர்த்தினார்.

கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த வாழ்க்கை அவருடையது என்றாலும், கடைசி வரை தமிழக மக்களின் இதயத்திலிருந்து நீங்கா இடம் பெற்றிருந்தார். ஜெயலலிதா அஞ்சா நெஞ்சுக்கு சொந்தக்காரர்; நினைத்ததைச் சாதிக்கும் உள்ள உறுதி கொண்டவர். கலையுலகில் மட்டும் அல்ல அரசியல் உலகிலும் தனது வரலாற்றை அழிக்க முடியாத பொன் எழுத்துகளால் பொறித்திருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு உற்ற தோழியாக, தாயாக மட்டுமல்லாமல் உத்வேகமாகவும் செயல்பட்டவர் ஜெயலலிதா. அவருடைய அரசியல் செயல்பாட்டை ஏற்காதவர்கள்கூட அவருடைய துணிச்சல், விடா முயற்சியை மறக்க மாட்டார்கள்!

SCROLL FOR NEXT