ஹரன் பிரசன்னா
என் சிந்தனைகளை வடிவமைத்த சோவுக்கு அஞ்சலி. சோவைப் போன்ற ஒருவரை இனி பார்ப்பது அரிது. வலதுசாரி அரசியலுக்கு தமிழ்நாட்டில் இருந்த உறுதியான, பொருட்படுத்தத்தக்க குரல்களுள் ஒன்று மறைந்திருப்பது துரதிர்ஷ்டம். பெரிய இழப்பு. சோவின் இழப்பு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் நிரப்ப முடியாதது. எதிர்க்கட்சி மனிதர்களோடு நட்பாக இருப்பது வேறு, அவர்களைக் கடுமையாக விமர்சிப்பது வேறு என்ற முக்கியமான நிலைப்பாட்டை சோவிடமிருந்து கற்க வேண்டியது அவசியம். குட் பை சோ.
ஷான் கருப்புசாமி
‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ என்ற அவருடைய நூலைப் படித்தவர்களுக்கு, சோ இந்திய அளவில் பல அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்தவர் என்பதும் அவரது அரசியல் அனுபவம் எத்தனை ஆழமானது என்பதும் புரியும். நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், பத்திரிகையாளர் என்று பல திறமைகளைத் தன்னிடம் கொண்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட நபரே வெடித்துச் சிரித்துவிடும்படி அரசியலை நையாண்டி செய்யும் அவரது திமிரான நகைச்சுவையின் ரசிகன் நான். ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு தலைவர்களின் மனசாட்சியாகச் செயல்பட்ட இதயம் தனது துடிப்பை நிறுத்திவிட்டது.
சுரேஷ் கண்ணன்
தொடர்ந்து அஞ்சலிகள் செலுத்தும் காலகட்டமாகி விடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. ஜெ-வுக்குப் பிறகு சோ. சோ.ராமசாமியின் சித்திரத்தை ஒற்றையான நோக்கில் வரைவதோ, வரையறுப்பதோ இயலாத காரியம். எதிலும் அடங்காதவராக அவர் இருந்தார். பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை. வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், நாடகாசிரியர், எழுத்தாளர், இயக்குநர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, அரசியல் விமர்சகர், ஆலோசகர், பார்வையாளர் என்று பல விதமான வேடங்கள். ‘நாகரிகக் கோமாளி’ என்கிற வார்த்தை வேண்டுமானால், அவரைப் பற்றிய சித்திரத்துக்குக் குத்துமதிப்பான வரையறையாக இருக்கலாம்.
துக்ளக் அவரது தீவிரமான முகங்களில் ஒன்று. அதிகாரத்துக்கு ஆதரவாகப் பெரும்பாலான ஊடகங்கள் இளித்துக்கொண்டும் அடிபணிந்துகொண்டும் இருக்கும் சூழலில், எல்லா காலகட்டத்திலும் அதிகாரத்துக்கு எதிராகத் துணிச்சலான விமர்சனங்களைத் தொடர்ந்து வைத்த எழுத்து அவருடையது. ரசிக்கத்தக்க கேலிகளாக, பகடிகளாக இவற்றை முன்வைத்ததில் அதன் கூர்மை மழுங்காமல் இன்னமும் அதிகமானது ஆச்சரியம். ஒரு மென்மையான ஆணாதிக்கவாதியின் குரலை அவரது கிண்டல்களில் தொடர்ந்து காண முடியும்.
திராவிட அரசியலின் அபத்தங்களைத் தொடர்ந்து கிண்டலடித்துக்கொண்டிருந்தது அவரது முக்கியமான பணிகளுள் ஒன்றாக இருந்தது. வெறுமனே நகைச்சுவையாளராக அல்லாமல், தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் சில முக்கியமான முடிவுகள், அசைவுகள் தீர்மானிக்கப்பட்டதில் இவருடைய பங்கும் இருந்ததாகச் சொல்லப்படுவதிலிருந்து இவருடைய முக்கியத்துவத்தை உணர முடியும்.
இரா. முருகன் ராமசாமி
எப்போதும் ‘துக்ளக் சோ’வாகத்தான் நினைவில் வருகிறார். அவருடைய நாடகங்கள் அதற்கு அடுத்த அடையாளம். சினிமா அதற்கும் பின்னால்.
1970-கள், துக்ளக் பத்திரிகையின், பொற்காலம். ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, கண்ணதாசனின் ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்று அருமையான தொடர்கள் துக்ளக்கில் வந்த நேரம் அது. துக்ளக் சத்யா அந்தத் தொடர்களையும், மற்ற பத்திரிகைகளையும், ஏன் துக்ளக் பத்திரிகையையும்கூட நயமான பகடி செய்த ஒண்ணரைப் பக்க நாளேடு வெளியானதும் அப்போதுதான். வண்ணநிலவன் ‘துர்வாசர்’ ஆக அவதாரம் எடுத்து, ‘துக்ளக்’ இதழில் நவீன இலக்கிய கர்த்தாக்களைச் சாடியது அதற்குப் பிறகு நிகழ்ந்த ஒன்று.
1971-ல் தி.க. ஊர்வலத்தில் தெய்வத் திருவுருவங்களுக்கு அவமரியாதை நிகழ்ந்தபோது, மற்ற பத்திரிகைகள் பிரசுரிக்க அஞ்சியிருக்க, துக்ளக் அந்தப் படங்களைப் பிரசுரித்து, கடுமையாக விமர்சனம் செய்து எழுதியது. பத்திரிகையின் அந்த இதழ் கடைகளிலிருந்து அகற்றப்பட்டது. அந்த நேரத்திலும் ‘துக்ளக் பத்திரிகைக்குத் தடை விதித்து, அதை இன்னும் பிரபலமடையச் செய்த அரசுக்கு நன்றி’ என்று தனதேயான நகைச்சுவையோடு ‘தி இந்து’ பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார் சோ.
முகமது பின் துக்ளக் படம் வெளியான திரையரங்குகளில், அப்படத்தைத் திரையிடுவதற்கு எதிராக நிகழ்ந்த கலகங்களையும் மீறி அவருடைய ரசிகர்கள் திரண்டு வந்து, அப்படத்தைக் குறைந்தபட்ச வெற்றியடையச் செய்தார்கள். அவருடைய ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ நாடகம் நடத்த எதிர்ப்பு இருந்த சூழ்நிலையில், நாடகக் குழுவினருக்கும், பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலில், புதுவையில் அந்த நாடகத்தைக் காண வந்த ஆயிரம் ரசிகர்களில் நானும் ஒருவன்.
நெருக்கடிக் காலகட்டத்தில் பத்திரிகைத் தணிக்கைக்குத் தன் பத்திரிகையை உட்படுத்த மறுத்த ஒரே பத்திரிகையாளர் சோவாகத்தான் இருக்கும். முழுக்க கறுப்பு வண்ணம் தீட்டிய அட்டையும், உள்ளே சர்வாதிகாரி படத்துக்கு விமர்சனம் என்று நெருக்கடி நிலையை எதிர்த்த கட்டுரையுமாக சோ பிரகாசித்தார். அரசு குனியச் சொன்னால் மண்டி போட்ட பத்திரிகையாளர் மத்தியில் சோ துணிச்சல்காரர்தான். பெருந்தலைவர் காமராஜர் முதல் இந்திரா, ராஜீவ், வாஜ்பாய், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா வரை அவர் விமர்சிக்காத தலைவர்களே இல்லை. யாரையும் சோ தரம் தாழ்ந்து தாக்கியதில்லை. அவருடைய அறிவார்த்த நேர்மையை மதிக்கிறேன்.
அவர் ஆன்மா சாந்தியடையட்டும்