பிரான்ஸ் கணித மேதை
பிரான்ஸ் நாட்டின் கணித மேதை சார்லஸ் ஹெர்மைட் (Charles Hermite) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரான்சின் வடகிழக்குப் பகுதியில் உள்ள டியூஸ் நகரில் (1822) பிறந்தார். தந்தை பொறியாளர். தாய் வியாபாரத்தை கவனித்து வந்தார். இவருக்கு 7 வயது இருந்தபோது, நான்சி என்ற இடத்துக்கு குடியேறினர்.
* காலில் குறைபாட்டுடன் பிறந்த இவர், சற்று சிரமப்பட்டுதான் நடப்பார். பிள்ளையின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று பெற்றோர் அச்சப்பட்டனர். ஆனாலும், இவரது கால் குறைபாட்டை அவர்கள் பெரிய தடையாக நினைக்கவில்லை.
* சிறுவயது முதலே அறிவியல், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கணிதம் குறித்த நூல்கள், கட்டுரைகள் படிப்பதில் தணியாத தாகம் கொண்டிருந்தார். கணித இதழ்களில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகளை மிகவும் விரும்பிப் படிப்பார். மற்ற பாடங்களில் இவர் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
* பல்வேறு கணிதத் தீர்வுகளைக் கண்டறிந்து, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடும் அளவுக்கு கணிதத்தில் திறன் பெற்றிருந்தார். கல்லூரிக் கல்விக்குப் பிறகு, இகோல் பாலிடெக்னிக் என்ற உயர் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். மாற்றுத்திறனாளி என்பதால், அங்கு இவருக்கு கடுமையான பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நிபந்தனைகளுக்கு மத்தியில் கல்வி கற்பதை விரும்பாமல் அங்கிருந்து வெளியேறினார்.
* ஜோசப் பெர்ட்ரான்ட் உள்ளிட்ட பல கணித வல்லுநர்களோடு இவருக்கு நட்பு ஏற்பட்டது. அவர்களுடன் கணித ஆய்வுகள் குறித்து அடிக்கடி விவாதித்தார். முறையாக உயர்கல்வி கற்காவிட்டாலும், உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர்களுடன் இணைந்து இளம் வயதிலேயே பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* எண் கோட்பாடு, வகையீட்டு சமன்பாடுகள், இயற்கணிதம், பல்லுறுப்புக் கோவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சொந்த முயற்சியில் ஆய்வு மேற்கொண்டார். இவருக்கு அனுமதி மறுத்த அதே இகோல் பாலிடெக்னிக் நிறுவனம், ஆசிரியராகவும், மாணவர் சேர்க்கை ஆய்வாளராகவும் இவரை நியமித்தது.
* தொடர்ந்து அங்கு பணியாற்றி, பல ஆய்வுகளை மேற்கொண்டார். பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பிறகு, பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்றார். 1876-ல் சார்போன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. ஓய்வு பெறும்வரை அங்கு பணியாற்றினார்.
* கணித மாறிலியான (constant) ‘e’, ஒரு விஞ்சிய எண் (transcendental number) என்பதை உறுதிப்படுத்தினார். ஹெர்மைட் உருமாற்றங்கள், ஹெர்மைட் செயலிகள் போன்ற ஏராளமான கண்டுபிடிப்புகளால் புகழ்பெற்றார்.
* சிக்கல் முழு எண்களை அறிமுகப்படுத்தினார். முழு எண்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் என்பதை வரையறுத்தார். கணிதத்தில் பல தீர்வுகளைக் கண்டறிந்ததோடு கோட்பாடுகளையும் வரையறுத்தார். தனது ஆய்வுகள் குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டார். பல பாடப் புத்தகங்களையும் எழுதினார்.
* சொந்த வாழ்க்கையில் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். உலகம் முழுவதும் உள்ள கணித வல்லுநர்களுடன் கடிதப் போக்குவரத்து கொண்டிருந்தார். கணித மேதை ஜாகோபிக்கு இவர் எழுதிய கடிதங்கள் உலகப் புகழ்பெற்றவை. கணித ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த சார்லஸ் ஹெர்மைட் 79-வது வயதில் (1901) மறைந்தார்.