வலைஞர் பக்கம்

ஸ்டான்லி கோஹென் 10

செய்திப்பிரிவு

அமெரிக்க உயிரி வேதியியலாளர்

மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற, அமெரிக்க உயிரி வேதியியலாளர் ஸ்டான்லி கோஹென் (Stanley Cohen) பிறந்த தினம் இன்று (நவம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் பிறந்தவர் (1922). ரஷ்ய யூதர்களான பெற்றோர் 1900-களில் அமெரிக்காவில் குடியேறினர். வருமானம் குறைவாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தனர்.

* சிறு வயதில் கோஹென் போலியோவால் பாதிக்கப்பட்டதால், ஒரு கால் ஊனமானது. பள்ளியில் அறிவியலுடன் பாரம்பரிய இசை மற்றும் கிளாரினட் இசைப்பதையும் பயின்றார். மிகவும் புத்திசாலி மாணவர் என்பதால், ப்ரூக்ளின் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கே உயிரியலும் வேதியலும் பயின்றார்.

* இளங்கலை பயின்றபோது, இவருக்கு செல் உயிரியல் நுணுக்கங்களில் குறிப்பாக, கரு வளர்ச்சி குறித்த புதிர்களை ஆராய்வதில் ஆர்வம் பிறந்தது. வேதியியலை, உயிரியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிந்து கொண்டார்.

* 1945-ல் விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறையில் வளர்சிதை மாற்ற செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, 1948-ல் முனைவர் பட்டம் பெற்றார். கொலராடோ பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவத் துறை மற்றும் உயிரி வேதியியல் துறைகளில் பணியாற்றினார்.

* புதிதாக வளர்ச்சியடைந்து வந்த உயிரியியல் ஆராய்ச்சிகளில், கதிரியக்க ஐசோடோப் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அனுபவம் பெற விரும்பினார். இதற்காக, 1952-ல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க கான்சர் சொசைட்டியின் கதிரியக்கவியல் துறையில் ஃபெலோவாக சேர்ந்தார்.

* தவளை முட்டைகள் மற்றும் அவற்றின் கரு முட்டைகளில் கார்பன் டையாக்சைடு நிலைப்படுத்துதல் குறித்து ஆராய்ந்த சமயத்தில், ஐசோடோப் நுட்பத்தைக் கற்றார். வளர்ச்சி செயல்பாடுகள் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த புகழ்பெற்ற விலங்கியல் வல்லுநர், விக்டர் ஹாம்பர்கரோடு இணைந்து செயல்பட்டார்.

* செயின்ட் லூயிசில் லெவி - மோண்டல்சினி என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். நரம்பு வளர்ச்சி காரணியை தனிமைப்படுத்துதல் தொடர்பான அவரது ஆராய்ச்சிக்கு இவரது உயிரி வேதியியல் நிபுணத்துவம் பெரிதும் துணைநின்றது.

* வான்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1959-ல் நரம்பு வளர்ச்சி காரணியைக் கண்டறிந்தார். அதன் பிறகு புறத்தோல் வளர்ச்சிக் காரணி ஏற்பியைக் (Epidermal growth factor receptor) கண்டறிந்தார். இதற்காக ரீட்டா லெவி - மோண்டல்சினியுடன் இணைந்து 1986-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றார். இவரது இந்த ஆராய்ச்சி புற்றுநோய் எவ்வாறு தொடங்குகிறது, அதனைக் குணப்படுத்தும் மருந்தை எவ்வாறு கண்டறிவது என்பன குறித்த புரிதலுக்கு வழிகோலியது.

* 1986-ல் அமெரிக்கப் புற்றுநோய் கழகத்தில் விசேஷ ஆராய்ச்சிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். உயிரி வேதியியல் களத்தில் இவரது பங்களிப்புகளுக்காக தேசிய ஆரோக்கிய அமைப்பின் கேன்சர் ஆராய்ச்சி வளர்ச்சி விருது, வான்டெர்பில்ட் பல்கலைக்கழக சாதனையாளர் விருது, தேசிய அறிவியல் அகாடமியின் விருதுகள், லூயிஸ் எஸ். ரோஸன்ஸ்டியல் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் விருதுகளை வென்றார்.

* கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லூசியா கிராஸ் ஹார்விட்ஸ் பரிசு, நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். செல்கள் வளர்ச்சியில் மாறுபாடுகளை உண்டாக்கும் ஊட்டச்சத்துகள், நரம்பு வளர்ச்சி காரணி உள்ளிட்ட ஆராய்ச்சிகளின் முன்னோடியாகக் கருதப்படும் ஸ்டான்லி கோஹென் இன்று 95-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

SCROLL FOR NEXT