எனது பக்கத்து வீட்டுக்காரரின் ஆல்டோ காரின் பின்புறம் ARMY என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். அடர்த்தியாக நிழல் பரப்பியிருக்கும் வாத மரத்தடி யில்தான் அநேகமாக நிறுத்தப் பட்டிருக்கும். நான் அவரை ராணுவ வீரர் என்றே நினைத்துக் கொண்டேன். ஆனால், வருடத்தின் எல்லா நாட்களிலும் ஒரு ராணுவ வீரர் வீட்டிலேயே இருக்க முடியுமா என்ற சந்தேகத்தை மீன் மார்க்கட்டில் தற்செயலாக பேச்சுக்கொடுத்தபோது கேட்டேன்.
பெரிதாக சிரித்தவர், ‘நான் சாஃப்ட்வேர் டெவலப்பர் சார். வொர்க் ஃப்ரம் ஹோம்.. என் சித்தப்பா மகன்தான் ஆர்மில இருக்கான்..’ என்றார். ‘பிறகு நீங்க ஏன் சார் காரில் ஆர்மி என எழுதி வைத்திருக்கிறீர்கள்’ என்றேன். “அது ஒரு கெத்துக்குத்தான் சார். அப்பத்தான் நம்ம காரை எவனும் தொடமாட்டான்..” துணுக் குற்ற நான் பேச்சை குறைத்துக் கொண்டேன். பிற்பாடு ஒன்றை கண்டறிந்தேன். அந்த வாத மரத்தின் நிழலின் கீழ் இரண்டு மூன்று கார்கள் நிறுத்த முடியும். மேற்படி நபர் ராணுவ வீரர் எனும் மரியாதையில் அல்லது பயத்தில் வேறு யாரும் காரை அங்கு நிறுத்துவதில்லை.
சொந்த உபயோகத்திற்கான வாகனங்களில் பிரஸ், போலீஸ், ராணுவம், பொதுப்பணித்துறை என அவரவர் பணி சார்ந்த துறையினை எழுதி வைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். இதன் பின்னால் உள்ள உளவியல் ‘துறைசார்ந்த பெருமிதம்’ மட்டுமல்ல. இந்த பறைசாற்றலின் மூலம் அவர்கள் தங்களை சாமான்யர்களிடமிருந்து தனித்துக்காட்ட விரும்புகிறார்கள். சலுகைகளைப் பெற நினைக் கிறார்கள். சிறிய விதிமீறல்களை அலட்சியமாக நிகழ்த்துகிறார்கள். பொதுவாக ‘பிரஸ்’ என எழுதப்பட்ட வண்டிகள் பொது இடங்களில் உரிய பார்க்கிங் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்கிறார் பார்க்கிங் காண்டிராக்ட் எடுத்து நடத்தும் நண்பர் ஒருவர்.
நோ என்ட்ரியில் நுழைந்து செல்லும் ஒரு தனியார்‘ஆர்மி’ வண்டியை போக்குவரத்து காவலர் பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவார். டிரங்கன் டிரைவ் செய் யும் வழக்கறிஞர்கள் மீது பெரும்பாலும் வழக்கு பதிவு செய்துவிட முடியாது. கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், வசூலிக்கப்பட்ட அபாரதங்களில் எத்தனை பேர் காவல்துறையினர்?! ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டும் ஒரு காவலரைக் கூட நான் இந்தப் பெருநகரில் கண்டதில்லை.
இத்தகைய சலுகைகள் / அத்துமீறல்கள் மெல்ல விஷம் போல பரவுகின்றன தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், ரயில்வே என எல்லாத் துறை களைச் சேர்ந்தவர்களும் இப்போது தத்தம் வாகனங்களில் இந்த அறைகூவல்களைத் தொடங்கி விட்டனர். “யோவ்.. நானும் கவர்மென்டு, நீயும் கவர் மென்டு” என்பதுதான் அவர்கள் சொல்ல வரும் செய்தி. தனியார் வாகனங்களில் இப்படி துறையின் பெயர்களை எழுதி வைக்க போக்குவரத்து சட்டம் அனுமதிப்பதில்லை. ஊடகங் களைச் சேர்ந்தவர்கள் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் வழங் கப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ளவே விதிமுறை இடம் கொடுக்கிறது.
ஊடகவியலாளர் ஆவதோ, ராணுவத்தில் பணியாற்றுவதோ, அரசு ஊழியர் ஆவதோ அவரவர் சுயவிருப்பு சார்ந்த தேர்வுகள். இதில் சகமனிதர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டி பெரு மிதம் கொள்வதில் பொருள் ஏதுமில்லை.
சமூக மனிதனாக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படும் ஒரு சாமான்யனை விட இவர்கள் எவரும் மேலானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் முதற்கட்டமாக வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த அறைகூவல்கள் கிழித்தெறியப்பட வேண்டும்.