காலையில் அலுவலகம் வந்து தன் இருக்கையில் அமரும்வரை ராஜன் தெளிவாகத்தான் இருந்தான். தன் அறையின் கண்ணாடி தடுப்புக்கு வெளியே ராணி தாண்டிப்போகும் போது அவன் கவனம் சிதறத் தொடங்கியது.
“சே.. என்ன இது.. அவளைப் பார்த்ததும் திரும்பி அதே எண் ணம்!” என்று சலித்துக் கொண் டான்.
இரண்டு நாட்களாகவே மனதுக் குள் ராஜன் புழுங்கிக் கொண்டு தான் இருந்தான். இந்த விஷயத் தைப் பற்றி ராணியிடம் எப்படி பேசுவது என்று. ராணி எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற பயம் அவனுக்கு சங்கடத்தைக் கொடுத்தது.
உடன் பணிபுரியும் அசோக் கிடம் கேட்டபோது, “சங்கடப்படாம இந்த விஷயத்தைப் பத்தி அவ கிட்ட கேட்டுடு” என்றான்.
“என்ன இருந்தாலும் நமக்கு கீழே வேலை பாக்கறவ கிட்டே போய் இதை கேக்குறது எனக்கு சங்கடமா இருக்கு.”
“போடா, இதுக்கெல்லாம் கவுர வம் பார்த்தா ஆகாதுடா” என்றான் அசோக்.
உணவு நேரத்தில் எதேச்சை யாக ராணியை நேருக்கு நேராக பார்த்துவிட்டான் ராஜன்.
“ராணி.. நீ தப்பா நெனச்சுக் கலைன்னா..” என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தான்.
“சொல்லுங்க சார்” என்றாள் ராணி.
“வந்து.. .. ஆயிரம் ரூபாய்க்கு நூறு ரூபா நோட்டா இருந்தா கொடேன்.. என்கிட்டே எல்லாம் பழைய ஐநூறு ரூபா நோட்டா இருக்கு.. பாங்க்ல போய் மாத்தலாம்னா ஒரே கூட்டமா இருக்கு. அதான்.”
“அதுக்கென்ன சார். இப்பவே வாங்கிக்கோங்க” என்று பர்ஸை திறந்தாள் வட்டிக்குப் பணம் கொடுக்கும் துப்புரவுத் தொழிலாளி ராணி.