வலைஞர் பக்கம்

பாரோன் இங்லட் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் பிரான்சுவா பாரோன் இங்லட் (Francois Baron Englert) பிறந்தநாள் இன்று (நவம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பெல்ஜியத்தில் (1932) பிறந்தார். தந்தை ஜவுளிக்கடை அதிபர். இரண்டாம் உலகப்போரின்போது, பெல்ஜியத்தில் ஜெர்மனி 1940-ல் ஊடுருவியதும், யூதப் படுகொலைகள் தொடங்கின. இவர் யூதர் என்பதை மறைத்து, பள்ளிக் கல்வி, இசைப் பயிற்சி ஆகியவற்றை ஒரு குடும்பம் இவருக்கு வழங்கியது.

* பெற்றோரைப் பிரிந்து டீனான்ட், லஸ்டின், ஸ்டீவ்மவுன்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்களில் வாழ்ந்தார். யுத்தம் முடிந்ததும், குடும்பம் ஒன்றுசேர்ந்தது. முகம் தெரியாத பல நல்ல இதயங்களின் உதவியால் தாங்கள் உயிர்தப்பியதாக இவர் அடிக்கடி நன்றியுடன் குறிப்பிடுவார்.

* பள்ளிக் கல்வியை முடித்தார். இலக்கியம், இசை, கணிதத்தில் சிறந்து விளங்கினார். 1955-ல் பிரசல்ஸ் பல்கலைக்கழகத்தில், எலெக்ட்ரோ மெக்கானிகல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றார். அதீத ஆர்வம் காரணமாக இயற்பியல் துறைக்கு மாறினார்.

* வருமானம் ஈட்ட அதே பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத் துறையில் உதவியாளராகப் பணியாற்றினார். இயற்பியலில் முதுகலைப் பட்டம், 1959-ல் முனைவர் பட்டம் பெற்றார். பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை மூலமாக, நியூயார்க் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

* வாழ்நாள் முழுவதும் நண்பராகத் தொடர்ந்த விஞ்ஞானி ராபர்ட் பிரவுட்டின் ஆராய்ச்சி உதவியாளராகவும், பின்னர் துணைப் பேராசிரி யராகவும் அங்கு பணியாற்றினார். ‘கண்டன்ஸ்டு மேட்டர்’, இரும்பு காந்தவிசை, கடத்துதிறன் குறித்து ஆராய்ந்தார். நண்பருடன் இணைந்து, ‘சமச்சீர் உடைதல்’ கோட்பாடு குறித்து ஆராய்ந்தார்.

* பெல்ஜியம் திரும்பி, பிரசல்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து, நண்பர் ராபர்ட்டும் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்தார். இரு நண்பர்களும் இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். தனது நண்பர்களை இணைத்து கோட்பாட்டு இயற்பியல் குழு அமைத்த இங்லட், அதன் துணைத் தலைவராக செயல்பட்டார்.

* சகாக்களுடன் சேர்ந்து, இயற்கையின் பொதுவான விதிகள், ஹிக்ஸ் புலம் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பொருட்களில் துகள் இருப்பது குறித்தும், துகள்களில் நிறை இருப்பது குறித்தும் கோட்பாடுகளை வெளியிட்டனர். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

* ‘சமச்சீர் உடைதல்’ கோட்பாட்டு விளக்கத்தில் இவரது பங்களிப்புக் காக ஃபிராங்கோய் அறக்கட்டளையின் விருது பெற்றார். பல்வேறு விஞ்ஞானிகளுடன் இணைந்து ஐரோப்பிய இயற்பியல் கழகத்தின் ‘ஹை எனர்ஜி பார்ட்டிகல்’ பரிசு, அமெரிக்க இயற்பியல் கழகத் தின் ஜே.ஜே.சகுராய் பரிசு, இயற்பியலுக்கான உல்ஃப் பரிசு, அஸ்டூரியஸ் விருது என பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

* புள்ளியியல் இயற்பியல், குவான்டம் புலக் கோட்பாடு, அண்டவியல், இழைக் கோட்பாடு. ஈர்ப்புவிசைக் கோட்பாடு ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். ஹிக்ஸ் இயங்குமுறையைக் கண்டறிந்தார்.

* இணை அணுத் துகள்கள் நிறையின் தேற்றம் குறித்த கோட்பாட்டியல் கண்டுபிடிப்புக்காக இவருக்கும் பீட்டர் ஹிக்ஸுக்கும் 2013-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதிர்ந்த வயதிலும் பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் பிரான்சுவா பாரோன் இங்லட் இன்று 84-வயதை நிறைவு செய்கிறார்.

SCROLL FOR NEXT