பருவநிலை மாற்றம் குறித்தும், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளும் தற்போது பலராலும் பேசப்பட்டு வருகின்றன. மைய நீரோட்ட அரசியலிலும் சரி, உலக அரசியலிலும் சரி... சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே உருவாகின்ற உறவுநிலைகூட சுற்றுச்சூழலை மையப்படுத்தியே இருக்கிறது.
பருவநிலை மாறுபாட்டின் காரணமாக கடல்மட்டமானது உயர்ந்து வருவது, புவி வெப்பமடைவது என கடந்த 10 வருடங்களாக இவற்றை பேசி வருகின்றோம். இத்தகைய பருவநிலை மாறுபாட்டிற்கென தனியே அமைதித் தூதராக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் ஹாலிவுட் நடிகரான லியார்னடோ டிகாப்ரியோ கடந்த மூன்று வருடங்களாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பருவநிலை மாற்றத்தின் விளைவுகளையும், அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் 'வெள்ளம் வரும் முன்' ('Before The Flood') என்ற ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்.
இந்த ஆவணப்படம் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி அமெரிக்காவின் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மேலும் இந்த ஆவணப்படமானது பொதுமக்களின் பார்வைக்காக அக்டோபர் 30 ஆம் தேதி நேஷனல் ஜியோகிரபி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் அந்தத் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்திலும் அந்த ஆவணப்படத்தை பதிவேற்றியுள்ளனர்.
கடந்து வந்த பாதை...
'டைட்டானிக்' திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த லியார்னடோ டிகாப்ரியோ அப்போது முதலே சுற்றுச்சூழலுக்காக பேசி வருபவர். 2000-களில் 'எர்த்ஃபேர்' (EarthFair) போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளில் முக்கிய பாங்காற்றியவர் டிகாப்ரியோ. தனது அறக்கட்டளையான லியர்னடோ டிகாப்ரியோ அறக்கட்டளை (Leonardo DiCaprio Foundation) மூலமாகவும் பருவநிலை மாற்றம் குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் நடவடிக்கைகளை செய்து வருபவர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபை இவரை உலக அமைதிக்கான தூதராக, அதிலும் குறிப்பாக பருவநிலை மாறுபாட்டில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய பணிகளுக்காக நியமித்தது. அதிலிருந்து இப்போதுவரை அவருடனே பயணித்து ஆவணப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தில் டிகாப்ரியோ நிறைய இடங்களுக்கு பயணிக்கிறார், பல்வேறு நபர்களுடன் பேசுகிறார். அவர்கள் பருவநிலை மாற்றம் சார்ந்த செயல்பாட்டாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு வாதங்களை நம்முன் வைக்கிறார். ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் ஐநாவின் பொதுச்செயலாளரான பான் கி மூனிடம் பேசும் டிகாப்ரியோ, 20 வருடங்களுக்கு முன் புவி வெப்பமாதல் பற்றி அப்போதைய நிகழ்ச்சிகளில் பேசியதை நினைவு கூர்கிறார். அப்போதிருந்தே இந்த நிலைமையானது விவாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது என்பதை சொல்லும் இடம் அது.
விஞ்ஞானிகளுக்கு மிரட்டல்...
தான் நடித்து வந்த ரெவனெண்ட் திரைப்படத்தின் காட்சிகளை படமாக்கும் இடங்களுக்கு அருகே இருக்கும் ஆற்றல் சார்ந்த பருவநிலை மாறுபாட்டில் முக்கியமாக இருக்கும் இடங்களுக்கு பயணிக்கிறார். முதலாவதாக கனடாவின் எண்ணெய் மணற் பரப்பிற்கு செல்லும் டிகாப்ரியோ அங்கிருக்கும் அதிகாரிகளிடம் பேசுகிறார்.
எண்ணெய் எடுக்கப்படும் முறைகள் குறித்தும் அவற்றை சுத்தப்படுத்தும் முறைகள் குறித்தும் பேசுகின்றனர். இந்த எண்ணெய்தான் பருவநிலை மாறுபாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. எண்ணெயை எரித்துதான் ஆற்றலானது பெறப்படுகிறது. அந்த ஆற்றலின் மூலம்தான் மின்சாரமும் சரி நமக்கு தேவையான ஆற்றலும் சரி கிடைக்கிறது. எண்ணெய் எரிக்கும்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடுதான் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. புவி வெப்பமாதலுக்கும் இந்த கார்பன் டை ஆக்சைடுதான் காரணம். கார்பன் டை ஆக்சைடு வெளியாவதை குறைப்பதற்குதான் பல்வேறு நாடுகளும் தங்களது ஆற்றல் மூலத்தை எண்ணெயிலிருந்து சூரிய ஆற்றலாக, காற்று ஆற்றலாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. கனடாவின் எண்ணெய் மண்ற் பரப்பிற்கு பின் கீரின்லாந்தின் பனிக்கட்டிகளில் நடக்கும் டிகாப்ரியோ பருவநிலை மாறுபாட்டின் உண்மையான விளைவை அங்கு பார்க்கிறார்.
அவ்வளவு உயரமான பனிக்கட்டிகள் புவி வெப்பமாதலால் எளிதில் உருகி கடல் மட்டத்தை உயர்த்துகின்றன. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் முக்கிய சுற்றுலாத் தலமான மியாமி கடற்கரையின் மேயரிடம் பேசும் டிகாப்ரியோ, அங்கு கடல் மட்டம் உயர்ந்ததால் கடல் நீரானது ஊருக்குள் வந்ததையும் அதற்கான நடவடிக்கைகளாக 400 மில்லியன் டாலர் செலவில் நகரமானது சீரமைக்கப்பட்டது பற்றியும் கூறுகிறார். அந்த சீரமைப்புகூட 50 வருடங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதற்கு பின் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை சொல்ல முடியாது என்பதையும் அந்த மேயரே கூறுகிறார். பருவநிலை மாறுபாட்டின் உண்மையான முகம்தான் இது. அதே நேரத்தில் பருவநிலை மாறுபாட்டின் விளைவுகளை கண்க்கிட்டு எச்சரிக்கும் விஞ்ஞானிகள் கூட தொழிலதிபர்களாலும் அவர்கள் சார்ந்த விஞ்ஞானிகளும் மிரட்டப்படுகின்றனர் அல்லது நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர்.
அதற்கு உதாரணமாக ஜெர்மானிய விஞ்ஞானியான மைக்கேல் மான், தான் மிரட்டப்பட்டதையும் பருவநிலை மாற்பாடு குறித்து தனது கணக்கீடுகள் தவறானவை என பரப்பப்பட்டதையும் கூறுகிறார். அமெரிக்காவின் நாடாளுமன்றமான காங்கிரஸிலேயே இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன எனவும், அதற்கான வேலையை கார்ப்பரேட்டுகள் செய்கின்றனர் எனவும் கூறுகிறார். உண்மையில் இதுபோன்ற நிலையை வெளிப்படையாக பதிவு செய்துள்ளனர்.
சீனாவின் தற்போதைய நிலை...
தொழில் வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு. தொழில் வளர்ச்சியின் காரணமாக முழுக்க மாசடைந்து போய் இருக்கும் சீனாவின் தற்போதைய நிலையானது பருவநிலை மாறுபாட்டை சரி செய்யும் முயற்சியில் உள்ளது. பெய்ஜிங்கின் மக்களது அன்றாட வாழ்வானது சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்கொள்ளும் விதமாகத்தான் உள்ளது. சீனாவானது கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதை குறைக்கும் விதமாக மாற்று ஆற்றலை முன்னெடுத்துள்ளது என்பதையும் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் டிகாப்ரியோ எதிர்கொண்ட கேள்விகள்..
வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சனை குறித்து பேசிய டிகாப்ரியோ, இந்தியா போன்ற வேகமாக வளரும் நாடுகளிலும் இப்பிரச்சினையை பேசுகிறார். ஆனால், இந்தியாவின் தரப்பில் பேசிய சுனிதா நரேன் வளரும் நாடுகளின் பிரச்சினையாக பொருளாதாரத்தையும் ஆற்றலையும் முன் வைக்கிறார். நாட்டில் 30% பேர் மின்சாரம்கூட இல்லாமல் இருக்கும்போது எப்படி மாற்று ஆற்றல் குறித்து யோசிப்பது? மேலும் நீங்கள் சொல்லும் மாற்று ஆற்றலுக்கான செலவும் அதிகமாக உள்ளது. ஆனால், நிலக்கரியோ மிகவும் மலிவானது. எனவேதான் அதை பயன்படுத்துகிறோம். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்றவைதான் இதில் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர், அமெரிக்க குடிமகனின் ஒருநாள் மின்சார பயன்பாடானது மற்ற எல்ல நாட்டு குடிமகன்களை விடவும் அதிகமாகவே இருக்கிறது என்பதையும் சுட்டி காட்டினார்.
இப்படியாக பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் டிகாப்ரியோ, அங்குள்ள பருவநிலை மாறுபாட்டின் விளைவுகள், அதனால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் பதிவு செய்கிறார். முக்கியமாக தீவு நாடுகளாக இருப்பவைக்கு இதனால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினையையும் அவ்விடத்திற்கே போய் பதிவு செய்துள்ளார். அத்தகைய தீவு நாடுகளின் முழு பொருளாதாரமும் இப்பருவநிலை மாறுபாட்டால் சிதைந்து போய் உள்ளதையும் பதிவு செய்துள்ளனர்.
மழைக்காடுகளின் அழிவு...
பருவநிலை மாற்றம்தான் பிரச்சினைகளை கொடுக்கிறது என்றால் மனிதர்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல, அப்பருவநிலை மாற்றம் ஏற்படுதற்கு காரணமே நாம்தான். இந்தோனேசியாவின் மழைக்காடுகளை அழித்து அதில் பனை எண்ணெய் தயாரிக்கப்படும் இந்தோனேசியாவின் அரசையும் அதனால் பாதிக்கப்படும் உயிரினங்களையும் பதிவு செய்கிறார் டிகாப்ரியோவும் அவரது குழுவும். யானைகளும் காண்டாமிருகங்களும், உராங்குட்டான் குரங்குகளும் சேர்ந்து வாழும் உலகின் கடைசி இடம் இந்தோனேசியாவின் மழைக்காடுகள். ஆனால் அவையும் தொழில் வளர்ச்சியின் பெயரால் அழிக்கப்படுகின்றன. ஆனால் இவை மற்ற காடுகளைப் போல இல்லை கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்ளிழுத்து புவி வெப்பாமதலைக் கொஞ்சமாவது குறைக்கின்றன. ஆனால் இக்காடுகள் அழிக்கப்படுவதால் புவி வெப்பமாதல் மேலும் அதிகரிக்கின்றன என்கின்றனர் அக்காட்டினைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதால்தான் புவி வெப்பமாதல் ஏற்படுகிறது எனினும், இன்னொரு வாயுவான மீத்தேனும் இந்த புவி வெப்பமாதலில் முக்கிய பங்காற்றுகிறது. அதனைச் சார்ந்த சில வாதங்களையும் ஒரு விஞ்ஞானியின் மூலம் முன் வைக்கின்றனர் ஆவணப்படக் குழுவினர்.
ஒபாமாவுடன்...
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பேசும்போது இத்தகைய பருவநிலை மாறுபாட்டை பற்றி கூறும் ஒபாமா, நான் எளிதாக அனுபவிக்கும் அத்தனை இயற்கை வளங்களையும் எனது மகள்களும் அதற்கு பிந்தைய தலைமுறையினரும் அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கான முன்னெடுப்புகளையும் நாம்தான் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
பருவநிலை மாற்றம் குறித்து கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் அவர்களது அறிக்கையையும் அவருடனான உரையாடலையும் ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர். படம் நெடுகிலும் பிரச்சினைகள் குறித்தும் அதன் விளைவுகளையும் பேசிய படக்குழுவினர், அதற்கான தீர்வாக நம்மில் இருந்து தொடங்க சொல்கிறார்கள். நாம் எதை செய்தாலும் அதனை சற்று வித்தியாசமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் செய்ய வேண்டும் என்கின்றனர். நாம் வாக்களிப்பதில் கூட இப்பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆவணப்படத்தில் ஓபாமா கூறியதுதான், இப்பிரச்சினையானது கண்ணுக்குத் தெரியாத காரணத்தாலேயே பெரிய பிரச்சனையாக பார்க்கப்படாமல் இருக்கிறது, உண்மையில் இப்பிரச்சனைதான் பிந்தைய நாட்களில் முக்கிய இடத்தை வகிக்க போகிறது. அதற்கு இப்பொழுதே தயாராக வேண்டும். ஆவணப்படமானது கடைசியில் டிசம்பர் 2015-ல் நடந்த பாரீஸ் பருவநிலை மாற்றம் கூட்ட அறிக்கையோடு முடிகிறது. கடைசியில் டிகாப்ரியோ சொல்லும் வார்த்தைகள் உண்மையானவை:
பாரீஸ் பருவநிலை மாற்றம் மாநாடு மட்டுமே இதற்கு தீர்வு இல்லை. ஆனால் இது ஒரு தொடக்கம். இதிலிருந்து நமது செயலைத் தொடங்க வேண்டும். நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். நமது கையில்தான் எல்லாம் இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆவணப் பட பின்னணி...
இந்த ஆவணப்படமானது ஆஸ்கர் விருது வென்ற இயக்குநரான ஃபிஷெர் ஸ்டிவென்ஸ் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆவணப்படமானது பல்வேறு உண்மைத் தகவல்களையும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் ஒரு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரின் மூலமாக ஆவணப்படுத்தியுள்ளனர். ஆண்டனியோ ரோஸ்ஸி ஒளிப்பதிவு செய்துள்ளார். அத்தனை காட்சிகளும் பருவநிலை மாறுபாட்டினை கூறுகிறது. நேஷனல் ஜியோக்கிரபி தொலைக்காட்சியிலும் அதன் யூடியூப் பக்கத்திலும் இந்த ஆவணப்படத்தினைக் காணலாம். ஆவணப்படமானது 95 நிமிடங்கள் ஓடுகின்றன. சப்டைட்டில் இல்லாத காரணத்தால் கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டும். பருவநிலை மாறுபாட்டில் நம்மாலான நடவடிக்கைகளை எடுக்கவும் அதனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த ஆவணப்படத்தின் பெயரிலேயே ஓர் இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர். beforetheflood.com இந்த இணையதளத்தில் சென்று பருவநிலை மாறுபாட்டினை சரி செய்யவும் அதனைப் பற்றி தெரிந்துகொள்ளவும் முயற்சி எடுக்கலாம்.
நம் கையிலும் சில கடமைகள் இருக்கின்றன.
ஆவணப்படத்தின் யூடியூப் இணைப்பு:
</p>