சென்னை என்ற நகரம் நமக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. நமக்கான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. சென்னையை நோக்கிப் பெருகி வரும் மக்கள் தொகைக்கு தனது பூர்வகுடி மக்களை இடம்பெயரச் செய்தது. நமது சொந்த ஊரின் பெருமைகளை அதன் மீது நின்றுகொண்டே 'ஊரா இது?' என்று தன்னையே தாழ்த்திப் பேச அனுமதித்தது.
இன்னும் நம்மால் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்று தினம்தினம் எரிச்சலோடு அழைக்கப்படுகிறது. இத்தனையும் கடந்து சென்னை மீண்டும் மீண்டும் நம்மை அன்போடு அரவணைத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு நமக்கு அன்புசெய்யும் சென்னையின் அடையாளத்தையும், அதன் மீது கொண்டுள்ள அதீதக் காதலையும் தனது புத்தகத்தின் வாயிலாக வாசகர்களிடம் கொண்டு செல்கிறார் எழுத்தாளர் கரன் கார்க்கி.
வாசிப்பு உலகில் தீவிரமாக இருக்கிறவர்கள் நிச்சயமாக கரன் கார்க்கியின் ஒரு புத்தகத்தையாவது வாசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவருடைய புத்தகங்களில் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள்தான் முக்கிய கதைக் களமே. எனவே கரன் கார்க்கியைப் பற்றிய அறிமுகத்தை சுருக்கிக்கொண்டு அவரது நேர்காணலுக்குச் செல்வோம்.
ஒரு எழுத்தாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைவிட ஒரு சென்னைவாசியாக அதற்கேயுரிய வெகுளித்தன்மையுடன் என்னுடன் உரையாடத் துவங்கினார் கரன் கார்க்கி.
''வட சென்னையில் உள்ள ஜெகனாதபுரம்தான் நான் பிறந்து வளர்ந்த இடம். இன்று ஜெகனாதபுரம் பல மாற்றங்களை அடைந்துவிட்டது. எனது பள்ளிப் பருவ நாட்கள் முதல் ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் மீது ஏனோ பிடித்தம் இல்லாமல் போனது. எந்தளவுக்கு என்றால் ஆறு முறை பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் கணக்கில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் கணிதத்தில் எனது மதிப்பெண் குறைந்து கொண்டு வந்ததுதான்" என்று சிரிப்புடன் பகிர்ந்துகொண்டு மேலும் தொடர்ந்தார்.
''கணிதம் எனக்கு வராமல் இருந்தது ஒரு வகையில் நல்லதாகிப் போனது. எனக்கு எது வரும் என்று அறிய வாய்ப்பு கிடைத்தது. சிறுவயதில் இருந்தே மந்திரக் கதைகள், சுவாரஸ்யமான கதைகளை தேடித் தேடிப் படிப்பேன். சிறுவயதில் எனக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டால் அதை யாரிடமும் கேட்காமல் எடுத்துவந்து படித்து விடுவேன். எனது செயல்பாடுகளைப் பார்த்து என்னை பிழைக்க தெரியாதவன் என்றெல்லாம் என் குடும்பத்தினர் அழைத்தனர். அவர்கள் மீது தவறில்லை அவர்கள் என்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் இவையெல்லாம்.
பத்தாம் வகுப்பு முடியும் முன்பே சில கவிதைகள், கதைகள் எல்லாம் எழுதி வார இதழ்களுக்கு அனுப்புவேன் இதழ்களும் எனது படைப்புகளை நிராகரித்தபடியே இருக்கும். அந்தக் காலகட்டத்தில் என்னுள் இருக்கும் எழுத்தாளனாகும் கனவும் மேலே மேலே பறந்து கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு படித்தேன். எனது கல்லூரி நாட்கள் பலவற்றை நான் நூலகத்தில்தான் கழித்தேன்"
ஒரு நல்ல வாசகன்தான் சிறந்த எழுத்தாளனாக முடியும் என்பது போல் தனது படைப்புகள் நிராகரிக்கப்பட்ட காலங்களில் தான் வடிக்கப்போகும் சிற்பங்களுக்காக சிறந்த சிற்பியாக சுயபயிற்சி மேற்கொண்ட கரன் கார்க்கியிடம், அது என்ன சார் கரன் கார்க்கி. உங்கள் இயற்பெயரா? என்று இடைமறித்துக் கேட்டபோது,
''இல்லைங்க, நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 'தினகரன்' என்ற பெயரில் செய்தித்தாள்கள், இலக்கிய உலகில் சிலர் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் புனைபெயர் வைத்துக்கொள்ள எண்ணினேன். அதனால் மாக்ஸிம் கார்க்கியின் மீதான அபிமானத்தால் தினகரன் என்ற பெயரிலிருந்த தின- வை நீக்கி, மாக்ஸிம் கார்க்கியிடமிருந்து கார்க்கியை எடுத்து கரன் கார்க்கி என்று புனைந்து கொண்டேன்"
ரஷ்யாவின் புரட்சி எழுத்தாளரான மாக்ஸிம் கார்க்கி எழுதிய 'தாய்' (THE MOTHER) என்ற நாவல் உலகப் புகழ் பெற்றது. என்ற தகவலோடு கரன் கார்க்கி கடந்துவந்த தனது முள்பாதைகள் நிறைந்த பயணத்தைத் தொடர்ந்தார்,
''பல நிராகரிப்புகளுக்கிடையே எனது முதல் நாவலான 'அறுபடும் விலங்கு' 2000ஆம் ஆண்டு எழுதி முடித்தேன். இந்த நாவலுக்கு நான் எடுத்துக்கொண்ட காலம் ஆறு மாதம். ஆனால் இந்த நாவல் வெளிவருவதற்கான காலம் தான் எழுத்தாளர்கள் பற்றிய என் சிறுவயதில் கண்ட கனவுகளை உடைக்கச் செய்தது.
எழுத்தாளர் உலகம் நிஜ வாழ்கையில் நாம் கனவில் கண்டதற்கு அப்படியே தலைகீழானாது. உதாரணத்துக்கு 2000ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட 'அறுபடும் விலங்கு' என்ற நாவலுக்கு பதிப்பாளர்களைத் தேடி 8 வருடங்கள் தொடர்ந்து அலைந்தேன். என் வாழ்க்கையின் கடுமையான நாட்கள் அவை. பலர் வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை அளித்து பின்னர் ஏதோ ஒரு காரணத்துக்காக மறுத்து விடுவார்கள்.
இந்த காலகட்டத்திலே 'கருப்புவிதைகள்' என்ற எனது இரண்டாவது நாவலையும் எழுதி முடித்தேன். தொடர்ந்து பதிப்பகங்களை நோக்கி எனது நாட்கள் நகர்ந்தன. இந்த காலகட்டத்தில் பணத் தேவை காரணமாகவும், பொருளாதார நெருக்கடியாலும் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்தேன்.
பல போராட்டங்களுக்குப் பிறகு 2009ஆம் ஆண்டு 'அறுபடும் விலங்கு', 'கருப்பு விதைகள்' என்ற இரு புத்தகங்களும் வெளிவந்தன. அந்த அனுபவத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று கூறும் கரன் கார்க்கியின் 'அறுபடும் விலங்கு' நாவலுக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருது, என். தங்கமுத்து-சீதாலட்சுமி நினைவு அறகட்டளை பரிசு என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
'கருப்பு விதைகள்' முடித்த கையோடு நான் எழுதிய மூன்றாவது நாவல் 'கருப்பர் நகரம்'. இந்த நாவலே பல வாசகர்களை எனக்குப் பெற்றுத் தந்தது என்று வேகமாக தொடர்ந்தவரிடம், ''உங்களுடைய பெரும்பான்மையான படைப்புகளில் சாமானிய மக்களின் சாயல் அப்படியே பிரதிப்பலிக்கிறதே! அவை நீங்கள் நேரில் சந்தித்த கதாபாத்திரங்களா? - உதாரணத்துக்கு கருப்பர் நகரத்தில் வரும் பாளையம், முனியம்மா, ஆராயி போன்ற கதாபாத்திரங்கள் சென்னையின் பூர்வீக முகத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் எனக் கேட்டதை ஆர்வத்தோடு எதிர்கொண்டவர், ''ஆமாம் இந்தக் கதாபாத்திரங்கள் பலரை நீங்கள் வட சென்னையின் குறுகிய தெருக்களில் பார்த்திருக்கலாம். அந்த மனிதர்கள் உங்களை புன்னகையுடனே கடந்து சென்றிருப்பர். எனினும் ஆங்காங்கே புனைவு கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருக்கும். அவ்வாறு இருந்தாலே அது முழுமையான நாவலாக இருக்கும்'' என்று நம்பிக்கையோடு பதில் தந்தார்.
அந்த நம்பிக்கைதான் அவரது 'கருப்பர் நகரம்' நாவலுக்கு கே.ஆர்.ஜி.நாகப்பன்-ராஜாம்மாள் அறக்கட்டளை இலக்கியக் குழுவும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியு செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது என்பதையும் இங்கே நினைவுகூரலாம்.
தொடர்ந்து தனது பேச்சை மேலும் தொடர்ந்தார் கரன் கார்க்கி, "கருப்பர் நகரத்தைத் தொடர்ந்து சமகாலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை முறையைக் கூறும் 'வருகிறார்கள்' என்ற நாவலை எழுதினேன இளைஞர்கள் ஐடி நிறுவனங்களில் எதிர் கொள்ளும் பிரச்சனை, அவர்களின் அரசியல் பார்வை குறித்தும் நிகழ்கால அரசியலை பேசுகிறது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை இளைஞர்கள் தங்களோடு தொடர்புப் படுத்திக் கொள்ளக்கூடும்'' என்று கூறியவரிடம் இன்னுமொரு கேள்வியை முன்வைத்தேன்.
உங்களைக் கவர்ந்த புத்தகம் எது? என்றதற்கு சற்றும் யோசிக்காமல், ''மாக்ஸிம் கார்க்கியின் 'மூவர்', 'அர்தமோனோவ்கள்' நூல்களும், ரவீந்திரநாத் தாகூரின் 'கோரா', வ.ரா.வின் 'சுந்தரி' பூமணியின் 'பிறகு' இவற்றுடன் பலநூறு புத்தகங்களுக்கு இணையாக மனிதர்களும்'' என்று கூறும் கரன் கார்க்கியின் 'ஒற்றைப் பல்' என்றொரு படைப்பும் எழுதி முடித்து அதன் வெளியீட்டுக்கான நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
தொடர்ந்து புத்தகம் எழுதிக் கொண்டிருப்பவர் நீங்கள். உங்களைக் கவர்ந்த வாசகர்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, "எனது படைப்புகளைப் படித்துவிட்டு நிறைய பேர் பாராட்டியிருக்கிறார்கள். எனினும் பொள்ளாச்சியிலிருந்து கருப்பர் நகரத்தைப் படித்துவிட்டு பெரியவர் ஒருவர் கையில் புத்தகத்தோடு என்னை சந்திக்க வந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது கண்ணிலிருந்து வந்த கண்ணீர்த் துளிகள் எனது கட்டை விரலில் விழுந்தது. இதைவிடப் பெரிய பாராட்டு வேறென்ன இருக்கப் போகிறது" என்றார்.
எழுத்தாளர்கள் வாழ்வில் பயணம் எந்த அளவு முக்கியம்? என்றொரு கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே தனது பதிலை படபடவென கொட்டத் தொடங்கினார்,
''பயணம்! அதுவும் எழுத்தாளர்களின் பயணம் என்பது நீங்கள் தினம்தினம் சந்திக்கும் அனுபவமே பயணம் போன்றதுதான். என்னைப் பொறுத்தவரை பயணம் செய்து எழுதும் அளவுக்கு பொருளாதாரமும் கிடையாது. நான் செல்லும் இடங்கள் எல்லாம் எனக்குப் பயணம்தான், பக்கத்துக்கு தெருவுக்குச் சென்றால் கூட அதைப் பயணமாகவே பார்ப்பேன் "என்றார் சிரித்தபடி.
பயணத்திற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? உங்கள் பயணம் எதனை நோக்கி செல்லப் போகிறது என தொடர்ந்து கேட்க, ''மரணம் வரை எழுத விரும்புகிறேன். சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். எதிர்காலத்தில் சாமானிய மக்களுக்காக திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது'' என தன் பயணம் போகும் திசைகளை வண்ணமிட்டு காட்டிக் கொண்டிருந்தார்.
உரையாடலில் இறுதியாக புதிதாக எழுத ஆவல்கொள்ளும் இளைஞர்களுக்கென்று அவர் சொல்லும் வார்த்தைகளில்கூட அனுபவமே சொட்டியது.
''சிறு புத்தகத்தையும் விட வேண்டாம். அனைத்தையும் படியுங்கள், யாரையும் சார்ந்து இயங்காதீர்கள், எழுத்து நடையில் யாரையும் ஆசானாகக் கொள்ளாதீர்கள். உங்களுக்கான நடையை உருவாக்குங்கள் அதுவே உங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தும். உங்கள் புத்தகங்கள் இன்று பேசப்படவில்லை என்று விரக்தி கொள்ளாதீர்கள். என்றாவது ஒருநாள் அந்தப் புத்தகங்கள் உரிய வாசகர்களைச் சென்றடையும். அவர்கள் அன்று உங்களை தூக்கிப் பிடிப்பார்கள் அன்று நீங்கள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். இதுவே வாழ்கை நமக்கு கற்றுக் கொடுத்தப் பாடம்.'' என்று நம்மை சிந்தனையில் ஆழ்த்தி விட்டு அவரது அடுத்த படைப்பான 'மரப்பாலம்' நாவலை வடிக்க நம்மிடருந்து விடைபெற்றார் கரன் கார்க்கி.
கரன் கார்கியின் நூல்கள்:
அறுபடும் விலங்கு - முரண்களரி படைப்புலகம் | கருப்பு விதைகள் - பாவை பதிப்பகம் | கருப்பர் நகரம் - பாரதி புத்தகாலயம் | வருகிறார்கள் - பாரதி புத்தகாலயம் | ஒற்றைப் பல் - டிஸ்கவரி புக்பேலஸ்
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >புது எழுத்து | சரவணன் சந்திரன் - இயல்பு நோக்கும் ஆளுமை!