ஆப்பிரிக்க எழுத்தாளர் கவிஞர்
‘நவீன ஆப்பிரிக்க படைப்புலகின் தந்தை’ எனப் போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சின்னுவ அச்செபே (Chinua Achebe) பிறந்த தினம் இன்று (நவம்பர் 16). அவரைப் பற்றிய அறிய முத்துக்கள் பத்து.
* நைஜீரியாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள இக்போ நகரில் பிறந்தார் (1930). ஆரம்பப் பள்ளியிலிருந்தே அறிவுக்கூர்மை பளிச்சிட்டது. நைஜீரியாவில் பிரிட்டிஷ் பப்ளிக் பள்ளியில் ஐந்தாண்டு கல்வியை நான்காண்டுகளில் முடித்தார். அங்கிருந்த நூலகம் வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தது.
* 1948-ல் நைஜீரியாவின் முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் அபாரமாகத் தேர்ச்சி பெற்றதால், உதவித் தொகையுடன் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இலக்கிய ஆர்வத்தால் மருத்துவக் கல்வியைக் கைவிட்டார்.
* இலக்கியம் பயின்றார். இதனால், இவர் பெற்று வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டாலும் குடும்பம், இவரது ஆர்வத்துக்கு உறு துணையாக இருந்தது. பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே நிறைய கட்டுரைகள் எழுதினார். முதன்முதலாக ‘இன் ஏ வில்லேஜ் சர்ச்’ என்ற சிறுகதை எழுதினார். 1953-ல் பட்டம் பெற்றார்.
* ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு மாணவர்களைப் படிப்பதற்கு ஊக்குவித்தார். தனக்காக வாங்கும் பத்திரிகைகள், நூல்களை அவர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பின்னர் நைஜீரியன் பிராட்கேஸ்டிங் சர்விஸில் வேலை கிடைத்ததால் ஆசிரியர் தொழிலை விட்டார்.
* 1958-ல் இவரது முதல் நாவல் ‘திங்க்ஸ் ஃபால் அபார்ட்’ வெளிவந்தது. தன் தாய்மொழியில் அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதினார். பரவலான பாராட்டுகளைப் பெற்று சிறந்த ஆப்பிரிக்க எழுத்தாளராகப் பிரபலமடைந்தார். தொடர்ந்து இவரது ‘திங்க்ஸ் ஃபால் அபார்ட்’ உள்ளிட்ட முக்கியமான படைப்புகள் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
* ‘நோ லாங்கர் அட் ஈஸ்’, ‘ஆரோ ஆஃப் காட்’, ‘தி மேன் ஆஃப் தி பீபிள்’, ‘ஆன்தில்ஸ் ஆஃப் சவான்னா’ உள்ளிட்ட நாவல்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவ்வப்போது நடைபெற்று வந்த போர்களால் பல இழப்புகளைச் சந்தித்தார். ஆனாலும் தொடர்ந்து எழுதிவந்தார்.
*அந்தச் சந்தர்ப்பங்களில் இவரது படைப்புகள் பெரும்பாலும் கவிதைகளாகவே இருந்தன. இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 1971-ல் ‘பிவேர், ஸோர் பிரதர்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. ‘ரெஃப்யூஜி மதர் அன்ட் சைல்ட்’ என்ற கவிதை உலகப் புகழ் பெற்றது. போருக்குப் பிறகு ஆப்பிரிக்கக் கலை, புனைக்கதை, கவிதைகளை ஊக்குவிக்கும் ‘ஓகிகே’ இதழைத் தொடங்குவதற்கு உறுதுணையாக செயல்பட்டார்.
* பட்டப்படிப்பு படித்த சமயத்திலிருந்து சமீபத்திய போர் கொடுமைகள் வரை, தான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 1972-ல் ‘கேர்ல்ஸ் அட் வார்’ என்ற தலைப்பில் வெளியிட்டார்.
* நாவல்கள் மட்டுமல்லாமல், சிறுகதைகள், சிறுவர் நூல்கள் மற்றும் சமூகம், அரசியல், பொருளாதாரம், ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை குறித்த ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். 1990-ல் அமெரிக்கா சென்ற இவர், அங்கு பார்ட் கல்லூரியில் மொழிகள் மற்றும் இலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியாற்றினார்.
* இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் மூலம் 30-க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆப்பிரிக்க இலக்கிய வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பு வழங்கியவரும் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சின்னுவ அச்செபே 2013-ல் 83-ம் வயதில் மறைந்தார்.