உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (Sania Mirza) பிறந்தநாள் இன்று (நவம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பெற்றோர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். சானியா மிர்சா மும்பையில் (1986) பிறந்தார்.
* கிரிக்கெட்டில் ஆர்வமிக்க தந்தை, விளையாட்டுப் பிரிவு செய்தியாளராகப் பணிபுரிந்தவர். சானியாவின் 4-வது வயதில் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. அங்கு கிளப்பில் அப்பா, டென்னிஸ் விளையாடுவதைப் பார்த்த சானியாவுக்கும் டென்னிஸ் மீது ஆர்வம் பிறந்தது.
* டென்னிஸ் வகுப்பில் குழந்தையைச் சேர்க்க பெற்றோரின் பொருளாதார நிலைமை இடம் தரவில்லை. தனியார் பள்ளியில் சேர்க்கக்கூட பணம் இல்லாததால், 1992-ல் ஹைதராபாத் திரும்பினர். வந்ததும், பள்ளியிலும், டென்னிஸ் பயிற்சியிலும் சேர்க்கப்பட்டார் சானியா.
* சிறுவயது முதலே முழு பலத்தையும் பயன்படுத்தி அதிரடியாக ஆடும் திறன் பெற்றிருந்தார். 8 வயதில், தன்னைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக வயதுள்ள பெண்ணைத் தோற்கடித்து 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வென்றார்.
* நாடு முழுவதும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, 12, 14, 16, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் வென்றார். நாட்டின் முன்னணி வீராங்கனையாக முன்னேறினார். பல சர்வதேசப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினார். இதற்கிடையில், ஹைதராபாத் நாசிர் பள்ளியில் பயின்று, செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
* பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் 16 வயதில் வென்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டார். 2004-ல் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். 2003-ல் தொடங்கி, 2012-ல் ஒற்றையர் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் வரை, ஒற்றையர், இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளிலுமே நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற தரவரிசையில் இருந்தார்.
* சர்வதேசப் போட்டிகளில் அடுக்கடுக்கான வெற்றிகளை ஈட்டினார். 2015 ஆகஸ்ட் முதல் 2016 பிப்ரவரி வரை, விம்பிள்டன் உட்பட 41 முறை தனது இரட்டையர் போட்டி ஜோடியான மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து வெற்றிகளைக் குவித்தார்.
* விம்பிள்டன் வெற்றி, மகளிர் இரட்டையர் போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம், 21 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்கள், உலக டென்னிஸ் ஒற்றையர் போட்டிகளில் 27-வது இடம் என இவரது அனைத்து சாதனையும் இந்தியாவைப் பொருத்தவரை முதலாவது சாதனையாகும். இவரது ‘ஃபோர்ஹேண்ட் ஷாட்’ திறன், சர்வதேச அளவில் புகழப்படும் நுட்பமாகும்.
* தன் சொந்த சாதனைகளைவிட, இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதை முதல் முன்னுரிமையாகக் கொண்டவர். விளையாட்டின்போது ஏற்படும் காயம், அதற்கான சிகிச்சை, இந்த ஓய்வால் ஏற்படும் இடைவெளி, இதனால் தரிவரிசையில் இறங்குமுகம், கூடவே சர்ச்சைகள் என பல தடைகள் வந்தாலும் அவற்றை நெஞ்சுரத்துடன் சமாளிப்பது இவரது மிகப் பெரிய பலம்.
* இவரது சுயசரிதை நூலான ‘ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்’, சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. தெலங்கானாவில் உலகத் தரத்திலான வசதிகளுடன் தன் பெயரில் டென்னிஸ் அகாடமி நடத்திவருகிறார். தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் சாதனை மங்கையான சானியா மிர்சா இன்று 31-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.