திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் தருவதற்கான முயற்சி சொற்ப அளவில்தான் நடந்திருக்கிறது. இந்நிலையில் இன்பத்துப் பாலில் இருந்து ஏழு குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நாட்டுப்புறப் பாடல் வடிவில் விளக்கவுரை எழுதியிருக்கிறார் தமிழ் ஆய்வாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன்.
இப்படி எழுதப்பட்ட பாடல்களுக்கு மண் வாசம் கமழ இசையமைத்திருக்கிறார் தாஜ்நூர். பாலகிருஷ்ணனின் வரிகளுக்கு தாஜ்நூர் இசையமைக்க, இன்னொருபுறம் தன் தூரிகையால் அவற்றுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறார் பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது.
‘நாட்டுக்குறள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தத் திருக்குறள் பாடல்களை நேரடியாக மேடையிலேயே இசைத்து (லைவ்), ஒலிநாடாவாக வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. நாரதகான சபாவில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, நடிகரும் ஓவியருமான சிவகுமார், நீதியரசர் மகாதேவன், செல்வி பத்மா சுப்ரமணியம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த விழாவில் வேல்முருகன், அந்தோணிதாஸ், நின்சி வின்சென்ட், செல்வி கவிதா கோபி. சின்னப்பொண்ணு, மீனாட்சி இளையராஜா, பிரபு ஜினேஷ், ஆகியோர் கலந்து கொண்டு பாடவிருக்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்குறளின் முதல் அச்சுப் பிரதியின் மீள் பதிப்பும் வெளியிடப்படுகிறது.