வலைஞர் பக்கம்

தேநீர் கவிதை: ஆற்றாமை

எம்.விக்னேஷ்

ஆற்றின்

பெயர் தாங்கிய பலகை

சுடுமணல் பாலைவனத்தை

கை காட்டுகிறது

ஆற்றின் ஆயுளை விட

மீன்களின் ஆயுள் அதிகம்

கருவாடாய் மிச்சமிருக்கிறது

ஆழமான பகுதி

எச்சரிக்கை காட்டிய பகுதியில்

மணல் வீடு கட்டி விளையாடுகிறார்கள்.

கடலின் விலாசத்தை

நதிகள் மறந்துவிட்டதோ

கடல் அலைமோதிக்கொண்டிருக்கிறது

மணல் லாரியிலிருந்து

சொட்டும் தண்ணீர்

ஆற்றின் ஆற்றாமையை கூறுகிறது.

நதி மூலம் கண்டவர்கள்

நிர்மூலம் ஆவதை தவிர்த்திருக்கலாம்

தீண்டாமையை ஆற்றிடம் காட்டியிருக்கலாம்

வரலாற்றில் வரையறுக்கப்படடாத

ஆற்றின் எல்லைக்கோடு

வரைபடத்திலும் வேண்டாமே

ஆற்றுக்கு மொழிகள் சொல்லித் தந்தது போதும்

உயிர் நாடி அடங்கும் முன்

சுவாசம் தந்து உயிர்ப்பிப்போம்!

SCROLL FOR NEXT