ஜெர்மன் தத்துவ மேதை
புகழ்பெற்ற ஜெர்மன் நாட்டின் தத்துவ மேதையும், இருத்தலியல் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவருமான மாக்ஸ் ஸ்டிர்னர் (Max Stirner) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜெர்மனியின் பெய்ரூட் நகரில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் (1806). இவரது இயற்பெயர், யோஹான் காஷ்பர் ஷ்மிட். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளிக் கல்வி முடித்ததும், இறையியல், மொழி இயல், வரலாறு மற்றும் தத்துவம் பயின்றார்.
* 1842-ல் பல்வேறு இதழ்களில் எழுதத் தொடங்கினார். செல்லப் பெயரான ‘ஸ்டிர்னர்’ என்பதற்கு முன்பாக ‘மாக்ஸ்’ என்ற பெயரையும் சேர்த்து, புனைப்பெயராகச் சூட்டிக்கொண்டார்.
* ‘தி ஃபால்ஸ் பிரின்சிபல் ஆஃப் அவர் எஜுகேஷன்’, ‘ஆர்ட் அன்ட் ரிலிஜியன்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் இவரது சிந்தனைகளின் சிறப்பை வெளிப்படுத்தின. தனிநபர்தான் உலகின் மையம், அவரது சிந்தனை, உணர்வுகள்தான் சமூகம் மற்றும் தார்மீக மதிப்பீடுகளின் அளவீடு என்று வலியுறுத்தினார்.
* 1844-ல் ‘தி இன்டிவிஜுவல் அன்ட் ஹிஸ் ஓன்’ என்ற நூலை வெளியிட்டார். இவரது தத்துவம் ஐரோப்பிய உலகின் அகநிலைவாத தத்துவத்தின் உச்சமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அரசு, சமயம், சட்டம், கல்வி, பொருளாதார முறை என அனைத்து விதமான சமூக மரபுகளையும் எதிர்த்தார்.
* தனது காலகட்டத்தில் நிலவிய ஜெர்மனியின் கருத்து முதல்வாதம், பிரான்ஸின் பொருள் முதல்வாதம், பிரிட்டனின் அனுபவவாதம், சர்வதேச சோஷலிசம் என அனைத்துத் தத்துவங்களையும் எதிர்த் தார். நீலிசம், இருத்தலியல், உளவியல் பகுப்பாய்வு கோட்பாடு, பின்நவீனத்துவம், நவீன அரசின்மை anarchy - (அரசு, சமயம், நிறுவனம் உள்ளிட்ட அதிகார மையங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கோட்பாடு) ஆகியவற்றின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.
* குறிப்பாக, ‘தனிநபர்வாத அரசின்மைக் கோட்பாட்டின் தந்தை’ எனப் போற்றப்பட்டார். 1846-ல் ‘தி ஈகோ அன்ட் இட்ஸ் ஓன்’ என்ற நூலை வெளியிட்டார். பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலில், அனைத்து மதங்களும், சித்தாந்தங்களும் வெற்று கருத்துகளின் அடிப்படையில் உள்ளன என்று கூறியுள்ளார்.
* அரசாங்கம், சர்ச் அல்லது பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து சமூக நிறுவனங்களும் தனி நபரின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றார். தனது தத்துவங் களைத் தெளிவாக விளக்கும் வகையில், ‘ஸ்டிர்னர்ஸ் கிரிட்டிக்ஸ்’, ‘தி ஃபிலாசபிகலி ரியாக்ஷ்னரி’ உள்ளிட்ட கட்டுரைகளை எழுதினார்.
* 1851-ல் ‘தி ஹிஸ்டரி ஆஃப் ரியாக்ஷ்ன்’ என்ற இவரது நூல் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. பொருளாதார வல்லுநர்களான ஆடம் ஸ்மித்தின் ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ மற்றும் ஜீன் பாப்டிஸ்ட்டின் ‘டிரையட் டி’எகனாமி பொலிட்டிக்’ உள்ளிட்ட நூல்களை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.
* இவரது மனைவி பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பணத்தை தன் படைப்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டார். கூட்டுறவு அடிப்படையில் பால் வியாபாரம் தொடங்கினார். ஆனால், மிடுக்காக உடையணிந்து கனவான் தோற்றத்தில் காணப்பட்ட இவரை விவசாயிகளும் பால் வாங்கும் வாடிக்கையாளர்களும் அந்நிய நபராக நினைத்து ஒதுங்கினர்.
* வியாபாரம் நஷ்டமடைந்தது, இறுதியில் தாய்வழி சொத்து வந்து சேர்ந்த தால், சுமாரான வாழ்க்கை நடத்த முடிந்தது. 19-ம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் எனப் போற்றப்பட்ட மாக்ஸ் ஸ்டிர்னர் 1856-ம் ஆண்டில் 50-வது வயதில் மறைந்தார்.