வலைஞர் பக்கம்

ஒரு நிமிடக் கதை: ஏ.டி.எம்.

என்.எஸ்.வி.குருமூர்த்தி

அந்த ஏடிஎம் மெஷினைச் சுமந்து கொண்டு அந்தச் சிறிய லாரி காட்டுப்பாதையில் சென்றது.

“டேய் முத்து... இறக்கினதும் வெல்டிங் பண்ணி மெஷினைத் திறந்து பணத்தை எடுக்கறது, பங்கு போடறது எல்லாம் அரை மணி நேரத்தில் முடிஞ்சிடணும்..”

“கவலைப் படாதே தலைவா.. அவ்வளவு நேரமே ஆகாது.”

“இப்போ எல்லாம் கழிவறையில கூட வெளியே கேமரா வச்சிடறானுங்கடா.”

“நாம கறுப்பு பர்தா போட்டுக்கிட்டு தானே உள்ளே போனோம்.”

புதர் மறைவில் இறக்கியதும் முத்து கேஸ் வெல்டிங் சிலிண்டரைத் திறந்து நாஸிலைப் பற்ற வைத்தான். நீல ஜ்வாலை வந்ததும் மெஷினின் மையப் பகுதியைத் துண்டாடினான்.

“இன்னாடா... டப்பா மெஷினா இருக்கு. இப்படியா பணம் வக்கிற மெஷின் பண்ணுவானுங்க.”

“மச்சான் ... பணம் உள்ளே இல்லேடா... சின்னதா ஒரு ஸ்பீக்கர் மாதிரி இருக்குடா.”

“கனெக் ஷன் தா பார்ப்போம்.”

திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தை அது பேசியது.

“தங்கள் பாஸ் புத்தகத்தில் பதிவுகள் முடிந்து விட்டன.. வெளியே வரும் போது எடுக்கவும்.”

SCROLL FOR NEXT