வாழ்வில் எதிர்பாராமல் நேரும் சங்கடங்களுக்கும் தோல்விகளுக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்கிறது 'கண்ணோடு கண்ணீரே' எனும் வீடியோ பாடல். இறுதித் தீர்ப்பை நமக்கு நாமே எழுதிக்கொள்ள வேண்டியதில்லை என்ற செய்தி சற்று வித்தியாசம்தான்.
புரமோஷன், காதல் தோல்வி, டைவர்ஸ், வாழ்க்கைத் துணையின் இழப்பு போன்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், திராணியோடு எதிர்கொள்ளச் சொல்கிறது இந்த வீடியோ.
பெரியபெரிய தோல்விகள் அல்ல, கவலைப்படும் மனம்தான் நம் வாழ்வை மேலும் மேலும் கீழே தள்ளக்கூடியது. தற்கொலையை நோக்கி நகரும் ஒவ்வொருவரின் உணர்ச்சிமிக்க காட்சிகளும் பார்வையாளரை தவிக்க வைக்கின்றன.
இல்லறத்தில், அன்பின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களில் தவிக்கும் பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்துவகை மனிதர்களையும் கணக்கில்கொண்டு நம்பிக்கையை விதைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் முத்துசாமி!
'மனம் உடைந்திட மரணம் தூண்ட தடைகள் தாண்டி உயர வா', 'மீண்டும் வாழ வாழ பிறக்கிறேன் நானே... 'கண்ணோடு கண்ணீரே....வாழ்க்கை ஒருமுறைதான் தற்கொலை வேண்டாம்', 'சூழ்நிலை கடந்துபோ' போன்ற டானிக் வரிகளுக்கு சித்தார்த்தா மோகன் தந்துள்ள இசை, மூடியுள்ள இதயத்தின் கதவுகளை முட்டித் திறக்கிறது. ஒரு முழு ஆல்பத்தை இவர் வழங்கமாட்டாரா என ஏங்கவும் வைத்திருக்கிறார்.
பாடல்வரிகள் தருவது நம்பிக்கையைத்தான். அப்படியிருக்க தோல்விக்கான உணர்ச்சிமிக்க காட்சிகள் மட்டும் ஏன்? அதை மீறிவாழும் சில மனிதர்களின் நம்பிக்கைக் காட்சிகளையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். 4 நிமிட வீடியோ பாடலில் கொஞ்சம் ஓவர் என்றாலும் எதிர்ப்பார்ப்புதானே தவிர இது விமர்சனமல்ல.
ஒரு பெரிய ஆல்பத்தின் தனிப்பாடலைப் போன்ற இச்சிறு குறும்படத்தை நீங்களும் காண....
</p>