வலைஞர் பக்கம்

சா.வையாபுரிப் பிள்ளை 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர்

இருபதாம் நூற்றாண்டின் முதன்மைத் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், சிறந்த படைப்பாளியுமான சா.வையாபுரிப் பிள்ளை (Sa.Vaiyapuri Pillai) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*நெல்லை மாவட்டம் சிக்கநரசய்யன் பேட்டையில் (1891) பிறந்தார். பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளி, திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். பட்டப்படிப்பில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்று, ‘சேதுபதி தங்கப்பதக்கம்’ வென்றார்.

*திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். திருவனந்தபுரம், திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். தமிழில் நல்ல புலமை பெற்றிருந்ததால், வழக்கறிஞர் பணிக்கு இடையே பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

*பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்டார். ஓலைச் சுவடிகளைப் புதுப்பித்ததுடன், கால நிர்ணய ஆய்வுகள் மூலம், அவை இயற்றப்பட்ட காலகட்டங்களைக் கண்டறிந்தார். மனோன்மணியம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் உள்ளிட்டவற்றை உரையுடன் பதிப்பித்தார். உ.வே.சாமிநாத ஐயருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்டவர் என்ற பெருமை பெற்றார்.

*சென்னை பல்கலைக்கழகம் 1926-ல் உருவாக்கிவந்த தமிழ் அகராதியின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். திருவிதாங்கூர் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். அது பொற்காலம் என போற்றப்பட்டது. அப்போது மலையாள மொழி லெக்ஸிகன் சொற்களஞ்சியம் பதிப்பிக்கப்பட்டது. இந்த அகராதி உருவாக்கும் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

*அகராதிக்கான சொற்தரவுகளைச் சேகரித்தபோது, அவற்றின் ஆதார நூல்கள் நல்ல முறையில் பதிப்பிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன்பிறகு படைப்பு, திறனாய்வு, பதிப்பு பணிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்தார். சென்னை பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக 1936-ல் பொறுப்பேற்றார். பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.

*சிறந்த பதிப்புக்கான விதிமுறைகளை வகுத்தார். சொற்களைப் பிரிக்க சில ஒழுங்கு முறைகளைக் கட்டமைத்தார். எதிர்காலத்தில் தமிழ் ஆராய்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தனது கற்பனையையும் எழுதி வைத்துள்ளார்.

*ரசிகமணி டி.கே.சி.யுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகம் அமைப்பைத் தொடங்கினார். வ.உ.சிதம்பரனார், பாரதியாரோடு நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்ற இவர், சுமார் 250 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

*களவியற்காரிகை, கம்பராமாயணம், தொல்காப்பியம், திருமந்திரம், திருமுருகாற்றுப்படை உட்பட சுமார் 40 நூல்களைப் பதிப்பித்தார். ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகத்தைச் சொந்தமாகவே வைத்திருந்தார். தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

*அனைத்து மொழிகளையும் நேசித்தவர். ஆங்கிலம், தமிழ் தவிர, மலையாளம், பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் பல குறிப்புகளும் ஓலைச் சுவடிகளையும் நூற்றுக்கணக்கில் சேகரித்து வைத்திருந்தார். இவை அனைத்தையும் கல்கத்தா தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.

*தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு 40 ஆண்டுகாலம் தொண்டாற்றிய வரும், ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், காலமொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சா.வையாபுரிப் பிள்ளை 65-வது வயதில் (1956) மறைந்தார்.

SCROLL FOR NEXT