பிரெஞ்சு தத்துவமேதை
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு தத்துவ மேதையான ஹென்றி லூயி பெர்க்சன் (Henri Louis Bergson) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1859) பிறந்தார். தந்தை, போலந்தை சேர்ந்த வணிகர். தாய் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தாயிடம் ஆங்கிலம் கற்றார். வீட்டிலேயே இவருக்கு யூத மதக் கல்வி வழங்கப்பட்டது. இவரது 9-வது வயதில், குடும்பம் பாரீஸுக்கு குடியேறியது.
*புத்திசாலி மாணவரான இவர் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்தி பல பரிசுகளை வென்றார். 18 வயதில் சிக்கலான கணிதத்துக்கு விடை கண்டறிந்து பரிசு பெற்றார். ‘அனலெஸ் டீ மேத்தமெடிகுயஸ்’ என்ற கணித நூலை எழுதி வெளியிட்டார்.
*மொழிகள், அறிவியல், கணிதம் என எல்லாவற்றிலும் திறமை இருந்ததால், எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது. நீண்ட சிந்தனைக்குப் பிறகு, மெய்யியலைத் தேர்ந் தெடுத்தார். 1881-ல் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
*கிரேக்கம், லத்தீன் தத்துவ வரலாற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றார். 1889-ல் அரிஸ்டாட்டில் குறித்து லத்தீன் மொழியில் ஆய்வு செய்து, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு கல்லூரியில் 8 ஆண்டுகள் பணியாற்றினார். உயிரியல் களத்தில் அப்போதுதான் உருவாகியிருந்த இனவிருத்தி ஆற்றல் கோட்பாடு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
*டார்வின் குறித்து ஆராய்ந்து அவரது கோட்பாடுகளுக்கு விளக்கம் அளித்தார். 1896-ல் இவரது முக்கியமான ‘மேட்டர் அண்ட் மெமரி’ நூல் வெளிவந்தது. அதில் மூளையின் இயக்கம், எண்ண ஓட்டங்கள், நினைவகம் குறித்து ஆழமாக ஆராய்ந்து எழுதி யிருந்தார்.
*‘பகுத்தறிவுவாதம், அறிவியலைவிட உடனடி அனுபவமும் உள்ளுணர்வும்தான் உண்மையைப் புரிந்துகொள்ள முக்கியம்’ என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு நூலை எழுதும் முன்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்.
*‘நார்மல் சுபீரியர்’ கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றினார். 1900-ல் ‘தி காலேஜ் ஆஃப் பிரான்ஸ்’ இவரை கிரேக்கம் மற்றும் தத்துவவியல் துறைத் தலைவராக நியமித்தது. சர்வதேச தத்துவவியல் மாநாட்டில் இவர் வாசித்த கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றது.
*ஸ்காட்லாந்தின் பல பல்கலைக்கழகங்களிலும் அடிக்கடி உரை நிகழ்த்தினார். சமூக நன்னெறிகள் குறித்து எழுதினார். இவரது நண்பர்கள் இவரது கட்டுரைகளைத் தொகுத்து 2 தொகுதி களாக வெளியிட்டனர். இவரது பல படைப்புகளில் தத்துவக் கோட்பாடுகள், நன்னெறிகள், மதம், கலை குறித்த சிந்தனைகள் இடம்பெற்றிருந்தன. இவரது கருத்துகளும் கோட்பாடுகளும் தத்துவவாதிகளிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
*இவர் சிறந்த பேச்சாளரும்கூட. காலம், அடையாளம், சுதந்திர எண் ணம், மாற்றம், நினைவாற்றல், பிரக்ஞை, மொழி, கணித அடிப்படை, காரண காரியங்களின் வரம்புகள் ஆகிய அனைத்தையும் குறித்து இவர் பேசியும், எழுதியும் வந்தார். வளமான, ஜீவனுள்ள கருத்துகள் வாயிலாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதுவது இவரது தனிச் சிறப்பு.
*‘தி கிரியேடிவ் எவால்யுவேஷன்’ நூலுக்காக 1927-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1930-ல் பிரான்ஸின் உயரிய இலக்கிய விருதைப் பெற்றார். நவீன தத்துவவாதத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹென்றி லூயி பெர்க்சன் 82-வது வயதில் (1941) மறைந்தார்.